பதவி வெறி பிடித்தவர் பொன்.மாணிக்கவேல்..! விடுதலை சிறுத்தைகள் வெளியிட்ட திடுக் தகவல்!

தனக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வேண்டும் என்று பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அவருக்கு அப்படியொரு வாய்ப்பு வழங்கவே கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான வன்னியரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு இது.


நிறைய வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. என்னால்தான் சரியாக தீர்ப்பு சொல்ல முடியும். அதனால் பதவி காலத்தை இன்னும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று எந்த நீதிபதியாவது சொல்ல முடியுமா? அப்படி சட்டத்தில் இடம் இருக்கிறதா? அப்படி சொன்னால் நீதியையும் அடுத்து வருகிற நீதிபதிகளையும் கொச்சை படுத்துவதாகாதா? 

அப்படித்தான் ஒருவர் சட்டத்தையும் காவல்துறை அமைப்பையும் கொச்சைபடுத்தி வருகிறார். வாழும் வரை பதவியிலும் அதிகாரத்திலுமே இருக்க வேண்டும் என்னும் பதவி வெறியோடு அலைகிறார். அவர்தான் பொன்.மாணிக்கவேல்.

கடந்த நவம்பர் 30, 2018 அன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேலுவின் பதவிக் காலம் முடிவடைந்தது. அதற்கான பணி ஒய்வு நிகழ்வும் நடைபெற்ற நேரத்தில்தான் பதவி நீட்டிக்கப்பட்டதாக நீதிமன்றத்தின் வாயிலாக ஆணை பெற்றார். (எந்த வழியில் பெற்றாரோ) அப்போதும் நிறைய சிலைகள் மீட்கபடவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் பணி நீட்டிப்பை நீதிபதிகள் வழங்கினர்.

இந்த ஓராண்டுக்குள் அவர் எத்தனை சிலைகளை மீட்டார்? இதற்கு முன்பு, இதே சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த திலகவதியம்மா மீட்ட சிலைகளைத்தான், இவர் மீட்டதாக மீடியாக்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் ‘சீன்’ காட்டி வருகிறார். திலகவதியம்மா செய்து வந்த இன்வஸ்டிகேசனிலேதான் பொன்.மாணிக்கவேல் விசாரித்து வருகிறார். அந்த விசாரணையின் ஒரு அங்குலம்கூட அல்லது வேறு வகை டீம்களை கூட பொன்.மாணிக்கவேல் பிடித்ததில்லை. ஆனாலும் மீடியாக்கள் முன்பு 23ம் புலிகேசியை போல மீசையை தடவிக்கொண்டே வீரம் காட்டி வருகிறார்.

இந்த ஓராண்டுக்குள் இந்தியாவிலேயே எங்கும் நடக்காதவையெல்லாம் நடந்தன. கடந்த 18.12.2018 அன்று தனக்கு மேலதிகாரியான பொன்.மாணிக்கவேலு மீது சிலை கடத்தல் பிரிவில் பணிசெய்யும் எஸ்.பி. ஒருவர், டி.எஸ்.பி. ஒருவர், இன்ஸ்பெக்டர் 4 பேர், சப்- இன்ஸ்பெக்டர் 6 பேர் என்று தமிழ்நாடு தலைமை காவல்துறை அதிகாரியான ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தனர். அதாவது, பொய்யாக வழக்கு பதிவு செய்ய வற்புறுத்துகிறார். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பொய் வழக்கு போட நெருக்கடி தருகிறார் என்பதுதான் அந்த புகார்.

இப்படி நேர்மையற்ற ஒருசார்பான அதிகாரியை வைத்துக்கொண்டு எப்படி சிலைகளை மீட்க முடியும்?

அதுமட்டுமல்லாது விளம்பரத்துக்காக பல பொய்களை நீதிமன்றத்திலேயே அள்ளிவிடுகிற ஆசாமியாக பொன்.மாணிக்கவேல் இருக்கிறார். கடந்த ஜூலை24, 2019 அன்று நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அங்கு வந்த பொன்.மாணிக்கவேல் காதர்பாட்சா போட்ட வழக்குக்கு பதில் சொல்லாமல், ”சிலை கடத்தலில் அ.தி.மு.க.வின் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கு. அதை விசாரிக்க நேரம் வேண்டும்’’ என்று ஒரு அதிரடி குண்டை போட்டார். நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அவர்களும் ஆகஸ்டு 6ம் தேதி அமைச்சர்கள் தொடர்பு குறித்து நீதிமன்றத்துக்கு சொல்லுங்கள் என்று வழக்கை தள்ளி வைத்தார். இதுவரை எந்த அமைச்சர் என்று மாணிக்கவேல் சொல்லவில்லை.

இப்படி சம்மந்தம் சம்மந்தமில்லாமல் விளம்பரத்துக்காக பொய்களை நீதிமன்றத்திலேயே அவிழ்த்து விடுகிறார். பணி நீட்டிப்புக்காலத்தில் எந்த சிலையையும் மீட்க முடியாமல் சும்மா ஊர் ஊராய் அரசு பணத்தில் உல்லாசமாக சுற்றியதுதான் மிச்சம்.

இப்போது அதே பல்லவியை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் பாடுகிறார் பொன்.மாணிக்கவேல். அவர் சார்பாக வழக்கறிஞர்கள் செல்வராஜ், மணிமேகலை ஆகியோர் நீதிமன்றத்தில், ”வெளிநாட்டில் விலை உயர்ந்த சிலைகள் இருக்கின்றன. அவற்றை மீட்க வேண்டும் அதனால் இன்னும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யவேண்டும்’’ என்று பதவிக்காக கெஞ்சுகிறார். வரும் 30ம் தேதியோடு பொன்.மாணிக்கவேலுவின் பணிநீட்டிப்பு காலம் முடிவடைகிறது. இந்த சூழலில் மீண்டும் பதவிக்காக நீதிமன்றம் மூலமாக நீட்டிப்பு பெறுவது சட்டத்திற்கே புறம்பானதாகும்.

சட்டத்தின் அடிப்படையில் எந்த அதிகாரியும் சிலைதடுப்பு அல்லது சிலை மீட்பு பணிகளை செய்யத்தான் போகிறார்கள். பொன்.மாணிக்கவேலுவால் மட்டுமே முடியும் என்று பணி நீட்டித்தால் மற்ற அதிகாரிகளு குறைத்து மதிப்பிடுவதாகாதா?

அப்படி எல்லா அதிகாரிகளும் பணி நீட்டிப்பு கேட்டால் பணி ஓய்வு எதற்கு? ஆகவே, பதவி வெறியோடு அலையும் பொன்.மாணிக்கவேலுவுக்கு பணி நீட்டிப்பு கொடுக்க கூடாது.

அந்த இடத்தில் வேறு நல்ல நேர்மையான அதிகாரிகள் எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கான வழியை நீதிமன்றம் திறந்து விடட்டும் என்கிறார் வன்னி அரசு.