வேலூர் தேர்தல் முடிவு! உதய சூரியன் சின்னத்தை பங்கமாக கலாய்த்த சிறுத்தை வன்னி அரசு!

சென்னை: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக.,விற்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகித்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 9) வெளியாகின. இதில், தொடக்கத்தில் சில மணி நேரங்களுக்கு திமுக பின்தங்கியிருந்தது. அதிமுக., சார்பாக போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார்.

ஆனால், பிற்பகலில் படிப்படியாக நிலவரம் மாறி, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி வாகை சூடினார். அவரது வெற்றி பலரையும் வியப்படைய செய்துள்ளது. 

இந்த வெற்றி பற்றி கருத்து தெரிவித்த பலரும் இது சாதாரண ஒன்றல்ல எனக் கூறி வருகின்றனர். இதுபோலவே, திமுக மூத்த தலைவரான பொன்முடி கூட, இந்த வெற்றி மிகப்பெரிய விசயம் எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர் வன்னி அரசு கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ''திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, கடைசி நிமிடம் வரை போராடி வெற்றி பெற்றார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாததே இதற்கு காரணம் என பலர் விமர்சித்தனர்.

ஆனால், தற்போது உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டும் கூட இவ்வளவு இழுபறிக்குப் பின்னர் வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வென்றுள்ளார். மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் அவரது வெற்றி அமைந்துள்ளது. உதயசூரியன் சின்னத்தை கடந்து, துரைமுருகனின் தனிப்பட்ட நக்கல், நையாண்டி பேச்சுகளை மக்கள் ரசிக்கவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. துரைமுருகன் போன்ற தனிநபர்கள் ஜனநாயக முறையில் நடந்துகொள்வதே நல்லது,'' என வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார்.