ஸ்டாலினை திட்டித் தீர்க்கும் வன்னி அரசு! அயோத்தி விவகாரத்தில் அதிரடி!

அயோத்தி தீர்ப்பு குறித்து வருத்தம் தெரிவித்திருக்கும் விடுதலை சிறுத்தைகளின் வன்னி அரசு, எதிர்க்கட்சியாக தன்னுடைய கடமையை ஸ்டாலின் சரிவர செய்யவில்லை என்று கோபமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ அவரது அறிக்கை.


உச்சநீதிமன்றத்திலிருந்து வந்த தீர்ப்பு இதுதானா? இதைத்தான் நாடே எதிர்பார்த்ததா? என்கிற ஆயரமாயிரம் கேள்வி எழுகின்றன. இந்த ஆயிரமாயிரம் கேள்விகளோடு கேள்விகளாக பல அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை ஆதரித்து அறிக்கை தந்திருப்பது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தி.மு.க., இடதுசாரிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருப்பது அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டுமே ராமர் கோவில் கட்டுவதில் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்திய அளவில் சனநாயகத்தின் மாற்றை உருவாக்க கூடிய கட்சியாக காங்கிரஸ் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. 

இந்திய அளவில் இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக இருக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட பெரிய அதிருப்தியையோ எதிர்ப்பையோ காட்டாதது வருத்தமளிக்கிறது.

1949 திசம்பர் 22 நள்ளிரவில் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக ராமர், சீதைகளை வைத்ததை தவறு என்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. 1992 திசம்பர் 6 அன்று இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் உச்சநீதிமன்றம் தவறுதான் என்று கண்டிக்கிறது.

450 ஆண்டுகாலமாக இசுலாமியர்கள் தொழுகை பயன்பாட்டில் இருந்ததையும் உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. இப்படி எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு விட்டு தான் அந்த நிலத்தை ராம் லல்லா தரப்புக்கு உச்சநீதிமன்றம் சாதகமாக்கியது. சன்னி வக்பு வாரியம் முன்வைத்த அத்தனையையும் ஏற்றுக்கொண்டு விட்டு, 

அந்த இடத்துக்கான ஆதாரத்தை சன்னி வக்பு வாரியம் காட்டவில்லை என்று சொல்லிவிட்டு ராமர் அங்கு பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகவே, அந்த நிலம் இந்துக்களுக்கே கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

2010, செப்டம்பர் 30 அன்று அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகளான தர்மவீர் சர்மா, சுதிர் சுகர்வால், எஸ்.யூ.கான் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பை சன்னி வக்பு வாரியமும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம், நிகோடா அகோரா இந்த மூன்று தரப்புக்கும் சரிபங்காக 2.77 ஏக்கர் நிலத்தை பிரித்து தரவேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்துத்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இடையில் உச்சநீதிமன்றம் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ‘வாழும் கலை’ஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை அமர்த்தி வெளியில் சமரசம் செய்ய முயற்சி செய்தது. அந்த சமரசமும் தோல்வியில் முடிந்தது. காரணம் இந்தக் குழுவும் உச்சநீதிமன்றத்து தீர்ப்பையே சொல்லியிருப்பதால்தான்.

ஒரு பங்கு நிலம் வக்பு வாரியத்துக்கு அறிவித்தது அநீதி என்று உச்சநீதி மன்றத்துக்கு மேல்முறையீடு போனால் அங்கு அந்த ஒரு பங்கு நிலமும் இல்லை என்று பிடுங்கி அனுப்பி இருக்கிறது உச்சசநீதி மன்றம். இது எப்படி இருக்கிறது என்றால், கீழமை நீதிமன்றங்களில் ஆயுள் தண்டனை வழங்கியதை எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்கு போனால் அங்கு மரண தண்டனை கொடுப்பது போல உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலோ தரவுகளின் அடிப்படையிலோ வழங்கிய தீர்ப்பல்ல என்பதை நீதிமன்றம் ஆரம்பத்தில் போடும் பீடிகையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அளித்த தீர்ப்பாகத்தான் பார்க்க முடியும்.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று பாஜக தமது தேர்தல் அறிக்கையில் கூறியதையே உச்சநீதிமன்றம் தீர்ப்பாக வாசித்திருக்கிறது. இது நீதியின்பால் நம்பிக்கை கொண்டவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இசுலாமியர்கள் வஞ்சிக்கப்படுள்ளனர். இசுலாமியர் முதுகில் மட்டுமல்ல சனநாயகத்தின் முதுகில் நீதித்துறை குத்திவிட்டது. 

இந்த தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரகாலமாக “தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும்” என்னும் வேண்டுகோள்கள் பரவின. பிரதமர் மோடியிலிருந்து நம்ம ஊர் ரஜினி வரை “எப்படிப்பட்ட தீர்ப்பானாலும் ஏற்போம்” ‘மைன்ட் செட்’ பண்ணும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியும் இந்தியா முழுக்க வெற்றி பெற்று விட்டது.

ஊடகங்கள் கூட, ‘அமைதியாக தீர்ப்பை ஏற்றுக்கொண்டனர்’ என்று தலைப்பு செய்தி வெளியிட்டு மகிழ்ந்தன. எதிர்க்கட்சிகளாக பொறுப்போடு செயல்பட வேண்டிய கட்சிகள் கூட இந்த தீர்ப்பு குறித்து எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் சமூகநீதியை வென்றெடுக்க கடந்த அரை தூற்றாண்டுகாலம் நம்பிக்கைக்குரிய பேரியக்கமாக இருக்கும் திமுக கூட இந்த தீர்ப்பில் மவுனித்தது பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. 

இத்தருணத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் மட்டுமே, ‘இந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பல்ல; சாத்திரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்றும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்புகள் சிதைத்து சின்னாபின்னமாகிவிட்ட நிலையில் இந்திய மக்கள் இப்போது தமது பாதுகாவலாக உச்ச நீதிமன்றத்தைத்தான் பார்க்கிறார்கள்.

அந்த நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு காப்பாற்றிவிட்டதெனக் கூற முடியவில்லை என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார். இந்த ஒற்றைக்குரல்தான் சனநாயகத்தின் நம்பிக்கை குரலாக ஒலித்திருக்கிறது.

பாஜகவின் பெரும்மபான்மைவாதத்துக்கு தி.மு.க. போன்ற சமூக நீதி அரசியல் பேசும் அமைப்புகள் துணை நிற்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை இனி போக போகத்தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார் வன்னி அரசு.