இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்க வேண்டும்… துணை முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் வணிகர் சங்க வெள்ளையன்.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடக்கும் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை உடனே திறக்கவேண்டும் என்று வணிகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.


இதையடுத்து கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செப்டம்பர் 29ம் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினார்கள். கோயம்பேடு வணிக வளாகம் திறப்பதற்கு உத்தரவு போட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், இதேபோன்று மற்ற பகுதிகளில் உள்ள மொத்த வணிக அங்காடிகளையும் விரைவில் திறப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதேபோன்று அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், உணவகம், இனிப்பகம், பேக்கரிகளை இரவு 10 மணி வரையிலும் திறந்து வைத்திருக்க அனுமதியும் கொடுக்க வேண்டினர். விரைவில் ஆவன செய்யப்படும் என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.