மது போதையில் டிரைவர்! பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! திருச்செந்தூருக்கு நேர்த்திக்கடனுக்கு சென்ற ஒரே குடும்பத்தின் ஆறு பேர் பலி!

தூத்துக்குடி அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த அருணாசல பாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நேற்று மாலை வேனில் புறப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் கால்வாய் பாலத்தை வேன் கடந்துகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி பின்னர் 20 அடி கால்வாயில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் ஜெகதீஸ்வரன், அருணாசல பாண்டி, 3 மாதக் குழந்தை அனீஸ்பாண்டி, முத்துலட்சுமி, பாக்கியலட்சுமி, நித்தீஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் அருணாசலபாண்டியின் மனைவி கவுசல்யா, செந்தில்குமார், அவரது மகன் விஷ்ணு , மகள் ஸ்வேதா, சூர்யபிரபா, சுகுமார் மற்றும் அவரது மனைவி மாரீஸ்வரி, மல்லிகா, முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

மேலும் வேன் உரிய முறையில் பராமரிக்காதால் ஏற்பட்ட விபத்தா அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்தில் சிக்கியதா என போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. இரவில் நெடுந்தூரம் வாகனம் ஓட்டுபவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு சென்றிருந்தால் இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருக்காது என உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.