அமித் ஷாவுக்கு வாஜ்பாய் வாழ்ந்த வீடு! டெல்லி அரசியலில் பரபரப்பு!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லியில் வசித்து வந்த வீட்டுக்கு அமித்ஷா குடியேறுகிறார்.


கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய வாஜ்பாய்க்கு கிருஷ்ணமேனன் மார்க் எனும் பகுதியில் உள்ள அரசு வீடு ஒதுக்கப்பட்டது. இந்த வீட்டில் தான் அவர் மறைவு வரை வசித்து வந்தார். வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து அந்த வீட்டை அவரது உறவினர்கள் காலி செய்தனர்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வாஜ்பாயின் வீட்டிற்கு சென்று வந்தார். அதோடு மட்டுமல்லாமல் அந்த வீட்டில் சீரமைப்புப் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அமித்ஷா அந்த வீட்டில் குடியேற இருப்பதால்தான் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் எத்தனையோ வீடுகள் மத்திய அரசுக்கு இருக்கும் நிலையில் இதற்காக வாஜ்பாய் வீட்டை அமித்ஷாவிற்கு ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய் வசித்து வந்த வீட்டை நினைவு இல்லமாக ஏமாற்றக் கூடாது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் டெல்லியில் தலைவர்கள் வசித்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது இல்லை என்று கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதனால் வாஜ்பாய் வீட்டில் அமைச்சா் குடியேறுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.