மேடையிலேயே வைகோவை கண்ணீர் விட்டு கதற வைத்த ஸ்டாலின்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதை கேட்டதும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் வைகோ கிட்டத்தட்ட மேடையிலேயே கதறியுள்ளார்.


மதிமுக சார்பில் கலைஞர் புகழ் போற்றும் விழா மற்றும் கலைஞர் குறித்த புத்தக வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

அப்போது பேசிய வைகோ, ஸ்டாலின் தலைமையில் இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றார். தன்னிடம் இல்லாத ஆற்றலும், திறமையும் ஸ்டாலினிடம் உள்ளது என்றும் வைகோ குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், வைகோவை போர்வாள் என்று கலைஞர் அழைத்ததை சுட்டிக்காட்டினார். இதே போல் தி.மு.க  தன்னை தொண்டர்கள்  தளபதி என்று அழைப்பதையும் சுட்டிக்காட்டினார்.

எனவே தற்போது தளபதியும், போர்வாளும் ஒரேமேடையில் இருப்பதாகக ஸ்டாலின் குறிப்பிட்டார். கலைஞர் உடல் நலம் குன்றி இருந்தபோது வைகோ வந்து பார்த்ததையும்,  அப்போது தனக்கு துணையாக இருப்பேன் என கலைஞரிடம் வைகோ கூறியதையும் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

இனி வைகோவுக்கு எப்போதும் தாம் துணையாக இருப்பேன் என மு.க.ஸ்டாலின் கூறியபோது, மேடையில் அமர்ந்திருந்த வைகோ நெகிழ்ந்து கண்கலங்கினார். அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அழுதுவிடக் கூடாது என்று வைகோ பல முறை முயன்று இறுதியில் தோற்றார். ஸ்டாலின் புகழ்ந்து பேச பேச வைகோவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் கைக்குட்டையை எடுத்து முகத்தை பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

தொடர்ந்து கூட்டணி ஒப்பந்தத்தில் விரைவில் வைகோ கையெழுத்து போட வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். இதனை தொடர்ந்து 40 தொகுதிகளிலும் வைகோ பிரச்சாரத்திற்கு தி.மு.க ஏற்பாடு செய்யும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். 

ஸ்டாலின் பேச வைகோ அழுக என விழா மேடையே உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது. இருந்தாலும் வைகோ அழுததற்கு வேறு காரணம் என்கிறார்கள் மதிமுகவினர். என்ன தான் ஸ்டாலின் மேடையில் இப்படி பாசத்தை பொழிந்தாலும் தொகுதி ஒதுக்கீடு என்றால் கரிசனம் காட்டவில்லை என்பதால் தான் என்கிறார்கள்.

ஒரே ஒரு தொகுதி தான் தர முடியும் என திமுக தரப்பு இழுத்தடிப்பதால் ஏற்பட்ட மன வேதனையை தான் வைகோ இப்படி அழுது தீர்த்ததாகவும் கூறுகிறார்கள்.