கூட்டணியை மறந்து ப.சிதம்பரத்தை கலாய்த்த வைகோ! எரிச்சலில் காங்கிரஸ் தொண்டர்கள்!

காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதையே மறந்து அக்கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செம்மையாக கலாய்த்தார்.


சென்னையில் ஏழு தமிழர்களை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி வைகோ ஒருங்கிணைத்த ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் மைக் பிடித்து பேசிய வைகோ, வழக்கம் போல் எங்கெங்கோ சென்றுவிட்டுஇறுதியாக காங்கிரசிடம் வந்தார். ஏழு தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதற்கு எதிராக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றதை சுட்டிக்காட்டி வைகோ பேசிக் கொண்டிருந்தார்.

   அப்போது திடீரென ப.சிதம்பரம் பக்கம் பேச்சு போனது. 2014ம் ஆண்டு ஏழு தமிழர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவையை உடனடியாக கூட்டிய ஜெயலலிதா, ஏழு பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

   மேலும் இரண்டு நாட்களில் மத்திய அரசு தீர்மானத்திற்கு பதில் அளிக்கவில்லை என்றால், ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார். இதனால் மத்திய அரசு ஏழு பேரை விடுதலை செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் கிடைத்தது.இதனால் அப்போது மத்திய அரசில் முக்கிய பொறுப்பில் இருந்த ப.சிதம்பரத்தை சந்திக்க சென்றோம்.

   வழக்கமாக ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் இருந்து யார் வந்தாலும் மதிக்கமாட்டார். ஏனென்றால் ப.சிதம்பரம் மிகப்பெரிய புத்திசாலி, சிதம்பரம் மிகப்பெரிய அறிவாளி, சிதம்பரம் மிகவும் படித்தவர், அதுவும் ஹார்வேர்டில் பட்டம் பெற்றவர். ஆனால் நானே லோக்கல் சென்னையில் படித்தவன், தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள் சென்றால் கூட, என்ன என்ன என்று கேட்டுவிட்டு அப்படியே விரட்டி விடுவார் ப.சிதம்பரம்.

   தமிழகத்தை சேர்ந்த யாரையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார். நம்மிடம் எல்லாம் சிதம்பரம் பேசினால் அது பெரிய விஷயம். இருந்தாலும் கூட ஏழு தமிழர்களுக்காக சிதம்பரத்தை சந்திக்க சென்றோம். என்னை பார்த்ததும் அருகே அழைத்து அமர வைத்து காஃபி கொடுக்கச் சொன்னார். எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது, உண்மையிலேயே நம்ம சிதம்பரம் தான் இவரா?

   நம்மை அருகே உட்கார வைத்து, காஃபி எல்லாம் கொடுக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். உடனே ஏழு தமிழர்கள் விடுதலைச்சு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல வேண்டாம் என்று சிதம்பரத்தின் கேட்டுக் கொண்டோம். அதற்கு ஆவண செய்வதாக ப.சிதம்பரம் உறுதி அளித்தார். ஆனால் நான் டெல்லியில் இருந்து சென்னை வருவதற்குள் மத்திய அரசு மேல்முறையீடு என்று அறிவித்துவிட்டது. இது தான் ப.சிதம்பரம் கதை என்று கூறி அந்த சாப்டரை வைகோ முடித்தார்.



   ப.சிதம்பரத்தை புகழ்வது போல் வைகோ இகழ்ந்தது காங்கிரஸ் தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருப்பதாக கூறும் வைகோ, ஏன்தேவையில்லாமல் தங்கள் தலைவர்கள் பற்றி விமர்சிக்க வேண்டும் என்று அவர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.