மிரட்டிய வைகோ! எச்சரித்த வெங்கய்யா! நாடாளுமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் புயல்!

நான் அவனில்லை என்ற ஸ்டைலில் நேற்று வரை சுப்பிரமணியம் சுவாமி, நரேந்திர மோடி போன்றவர்களை எல்லாம் பார்த்துப் பார்த்து பேசிவந்த வைகோ, பதவியேற்ற கையோடு, நாடாளுமன்றத்தின் மேலவையில் கொதிக்கத் தொடங்கிவிட்டார்.


தமிழ்நாட்டில் காவிரி விளைநிலங்களை அழிக்கக்கூடிய மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எரிகாற்றுக் கிணறுகள் தோண்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. ஒவ்வொரு கிணறும் 10,000 அடி ஆழத்திற்குத் தோண்டப்படும் என்று தெரிகிறது. 

தூத்துக்குடியைச் சீரழித்த ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு, காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட 276 இடங்களில் உரிமம் வழங்கியிருக்கின்றார்கள். ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 67 கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. கிணறு தோண்டும்போது 636 நச்சு வேதிப் பொருட்களை நிலத்திற்குள் செலுத்த இருப்பதால் நிலம் அழிந்தே போய்விடும், விவசாயிகள் வாழ்க்கை இழந்துவிடுவார்கள்.

இதனால் விவசாயிகளுக்கு பேராபத்து என்பதை பல்வேறு போராட்டத்தின் மூலம் தெரிவித்த பிறகும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கிறார்.இதனை செயல்படுத்தினால் தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் பிச்சைப்பாத்திரம் ஏந்தக் கூடிய நிலைமை உருவாகும்.

எனவே இந்தக் அழிவுத் திட்டங்களைக் கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கின்றேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கிறேன் என்று கொந்தளித்தார். இதனைக் கேட்ட மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, இப்படி எச்சரிக்கை விடும் தொனியில் பேச வேண்டாம், கோரிக்கை வையுங்கள் என்று கூறி வைகோவை அமைதிப்படுத்தினார். அப்பாடி, புயல் வீச ஆரம்பிச்சாச்சு.