நாடாளுமன்றத்தில் கர்ஜித்த வைகோ! கைதட்டி ஆராவாரம் செய்த கேரள எம்பிக்கள்!

நாடாளுமன்றத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பேசியதை கேட்டு கேரள எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


நாடாளுமன்றத்தில் இன்று பூஜ்ய நேரத்தில் வைகோ பேசினார். அப்போது தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியுட்ரினோ ஆய்வு மைய விவகாரத்தை வைகோ எழுப்பினார்.

மாநிலங்களவையில் வைகோ பேசியதாவது:- நியுட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் பொட்டிபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நியுட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை குடைய உள்ளனர்.

மலையை குடைய சுமார் 1200 டன் டைனமைட் வெடிப் பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 12 லட்சம் டன் எடையுள்ள பெரிய பாறைகளை உடைத்து நொறுக்க உள்ளனர். இதற்காகவே வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

பொட்டிபுரத்தில் மலையை குடைய டைனமைட் வைக்கும் போது அருகே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுக்கி அணை உடையும். இதே போல் முல்லைப் பெரியாறு அணையும் உடையும். மலையை குடைந்து சுமார் 11 லட்சம் டன் பாறைகளை அகற்ற உள்ளனர். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலே சீர்கெடும் என்று கர்ஜித்தார் வைகோ. 

சிறிய தடங்கலும் இன்றி வைகோ பேசிய பேச்சு மாநிலங்களவையை அதிர வைத்தது. உடனடியாக கேரள எம்பிக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதற்கு காரணம் இடுக்கி அடை கேரளாவில் உள்ளது தான்.