வைகோ நல்லவரா, கெட்டவரா ? குழப்பத்தில் ஸ்டாலின்!

வைகோ போன்ற நீண்ட அனுபவம் கொண்ட ஒருவர் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குச் செல்லவேண்டும் என்று ஸ்டாலின் அனுப்பிவைத்தார். ஆனால், இப்போது அவரே, வைகோ அங்கே என்னதான் செய்கிறார் என்று குழப்பமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.


மோடியை கடும் எதிரி போன்று பாவித்துவந்த வைகோ, திடீரென அவரை சந்தித்து மாலை, மரியாதை போட்டு செல்லம் கொஞ்சுகிறார். அதேபோன்று ஒவ்வொரு பாஜ.க. தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.

அட, இதெல்லாம் நாடாளுமன்ற மரபு என்று எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், நாடாளுமன்றத்தில் அவர் பேசும் விவகாரமும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தெருமுனையில் மேடை போட்டு மைக் பிடித்து ஆவேசமாக கத்துவது போல நாடாளுமன்றத்தில் கத்தி வருகிறார். 

அதைவிட ஒரு விவகாரம். வைகோ பேசியதைக் கேட்டு பிரதமர் மோடி கைதட்டி ரசித்தாராம். அதைக்கூட ம.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து செய்தியாக வெளியிடுகிறார்கள். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

காஷ்மீர் பிரச்னையில் அவர் பேச எடுத்துக் கொண்ட நேரத்தில் பெரும்பகுதியை காங்கிரசை தாக்குவதிலே முனைப்பு காட்டினார் என்பதை விடவும், ’’என்னை பேச விடுங்கள் நான் காங்கிரசை தாக்கி பேச வேண்டும்’’ என்று அவர் அனுமதி கேட்ட விதமும், அதைக் கண்ட அமித்ஷா வைகோ பேசுவதற்காக சிபாரிசு செய்ததையும் எப்படி புரிந்து கொள்வது...?

காங்கிரஸ் மீது வைகோ வைத்த குற்றச்சாட்டுகள் நிராகரிக்கதக்கதல்ல, விவாதிக்க வேண்டியதே ஆனால், அதற்கான நேரம் இதுவல்ல. இந்த பேச்சானது தற்போதைய பாஜகவின் அநீதியை நியாயப்படுத்தவே உதவும் என்பது வைகோவுக்குத் தெரியாதா..?