ஸ்டாலின் அழைத்தும் டெல்லி போகாத வைகோ! சேலத்திற்கு வருமாறு திடீர் அழைப்பு! காரணம் என்ன தெரியுமா?

டெல்லியில் காஷ்மீர் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. நடத்திய போராட்டம், சும்மா கண் துடைப்பு நாடகமாகத்தான் நடந்துமுடிந்தது. ஏனென்றால், ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் போன்ற யாரும் அங்கே போகவில்லை.


ஸ்டாலின் காரணம் எதுவும் கூறவில்லை. திருமாவளவன் அன்றைய தினம் முக்கியமான மீட்டிங் இருந்தது என்கிறார். உடல் நலம் சரியில்லை என்று வைகோ சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், இவை எல்லாமே உண்மை இல்லை என்பதை சொல்லவே வேண்டியதில்லை. இந்த நிலையில் சேலத்தில் ஆகஸ்ட் 27 அன்று நடைபெற உள்ள பவளவிழா மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் வைகோ. இதுதான் அந்த அழைப்பு

தமிழர் சமுதாயத்தை, மானமும் அறிவும் உள்ளதாக உயர்த்திட, அரிமாவாகச் சிலிர்த்து எழுந்து, உயிர் மூச்சு உள்ளவரை போராடிய அய்யா பெரியார் தலைமையில் அன்று நடைபெற்ற மாநாட்டில், நம் உயிரில், உணர்வில், குருதியோட்டத்தில் நீக்கமற நிறைந்துவிட்ட அறிஞர் அண்ணா அவர்களின் தீர்மானம், நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக பரிணாம வளர்ச்சி கொள்ளச் செய்தது.

“சூதும் சூழ்ச்சியும் புகமுடியாத வளமான உமது மனத்திலே தோன்றும் தூய கருத்தை அச்சம் தயை தாட்சணியமின்றி எடுத்துக் கூற வாரீர் சேலத்திற்கு என்று அழைக்கிறோம். அன்போடு, உரிமையோடு! சொல்லும் செயலும் வெல்லும் வகையுடையதாக உம்மிடம் அமைந்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு செயலாற்றும் சிலபேர்கள் உள்ளனர் என்ற பூரிப்போடு, வாரீர்! விரைந்து சேரீர்!

ஒன்றாக சேலத்தில்! உரிமைப்போர் நடத்த இதுவே சரியான காலம் என்பதை சேலம் எடுத்துக்காட்டும் என்று நம்புகிறோம்’’ என்று திராவிட நாடு இதழ் மூலம் அண்ணா அறைகூவி அழைத்தது இன்றைக்கும் பொருத்தமாகத்தானே இருக்கின்றது?

75 ஆண்டு வரலாறு காணும் திராவிடர் கழகம், நூறாண்டுகளைக் கடந்தும் தொடரும் திராவிட இயக்கம், தமிழ் மண்ணில் நிகழ்த்திய சாதனைகள், புரட்டிப் போட்ட புரட்சிகள் ஏராளம்! ஏராளம்!! சமூக நீதி, பெண்கள் உரிமை, மதநல்லிணக்கம், சமத்துவம் முதலான மறுமலர்ச்சி மாண்புகள் இந்தியத் துணைக் கண்டத்திலேயே, தமிழகத்தில் மட்டும் செழித்து செம்மாந்த நிலையில், உயிர்த் துடிப்புடன் உலவி வருவதற்கு பெரியார்-அண்ணா பெரும்படைதான் காரணம்!

நம் விழி திறந்த வித்தகர்களான பெரியாரும், அண்ணாவும் இல்லை என்ற துணிச்சலில், திராவிடத்தை ஆரியவர்த்தம் ஆக்கிட ஆளுகின்ற காவிக்கூட்டம் களம் இறங்கி உள்ள காலம் இது! ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற முழக்கம் பொருளாதார அளவுகோலால் வகுப்பு உரிமையை வீழ்த்தும் சதித்திட்டம்,

‘இந்து’ எனும் மயக்க மருத்து தந்து, வர்ணாசிரம தர்மத்தை உயிர்ப்பிக்கும் பகீரதப் பிரயத்தனம் இவைகள் எல்லாம் அவர்களின் அம்புறாத்தூளியில் இருந்து அடுக்கடுக்காகப் புறப்பட்டு வரும் அம்புகள்.

அவற்றைத் தடுத்துத் தகர்ப்பதற்கு, பெரியார்-அண்ணா கொள்கை எனும் அறிவு ஆயுதம் ஏந்த வேண்டிய காலத்தில்தான் திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலத்தில் நடக்கின்றது. ஈரோட்டுப் பட்டறையிலும், காஞ்சிப் பாசறையிலும் வார்ப்பிக்கப்பட்ட திராவிடச் சிந்தனை எனும் கவசம் ஏந்தி, சங்கொலி முழங்கி அணிவகுத்திட, தமிழர்கள் சேலத்திற்கு அணிவகுத்திட வேண்டும்.

சற்று உடல்நலம் இன்றி, மருத்துவர்களின் கட்டுப்பாடு காரணமாக, ஓய்வில் இருந்தாலும்கூட, என் மனமெலாம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டு நிகழ்வுகளை நோக்கியே மையம் கொண்டுள்ளது. நெஞ்சத் திரையில் மாநாட்டின் மாட்சிகள் - வண்ணமிகு காட்சிகள் ஓவியமாய் ஓடிக் கொண்டே இருக்கின்றது.

திராவிடர் கழகத்தின் தலைவர்- விடுதலை ஆசிரியர் - தமிழர் தலைவர் நம் அனைவரின் மூத்த அண்ணன் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில், தி.மு.கழகத்தின் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், நாளைய முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரை ஆற்றுவதும்,

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களும், நம் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு முழக்கமிடுவதும் மகிழ்ச்சிக்கு உரியதாகும் என்கிறார் வைகோ. எல்லோரும் கிளம்புங்கப்பா...