விவசாயிகள் பயிர்க்கடன் பெற கூட்டுறவு சங்கங்கள் அலைக்கழிப்பதா? வைகோ கண்டனம்

விவசாயிகளுக்கு பயிர்க் கடன் கிடைப்பதில்லை என்று வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், வேளாண் வளர்ச்சிக்கு நீண்ட காலக் கடன் அளிப்பதைத் தங்கள் அடிப்படைக் குறிக்கோளாகவும், முதன்மை வணிகமாகவும் கொண்டுள்ள கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கு, வங்கி ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் பொருந்தாது என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெற்றுவரும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் கடன் பெறுவதற்கு, மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் இணையான கணக்கு (Parallal Account) தொடங்க வேண்டும், “மிர்ரர் அக்கவுண்ட” (Mirror Account) எனப்படும் இணையான கணக்கு மத்தியக் கூட்டுறவு வங்கி அல்லது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் இருந்தால்தான், பயிர்க்கடன், நகைக்கடன், சிறு வணிகக் கடன் உள்ளிட்டவற்றைப் பெற முடியும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் இதனை ஏற்று கடந்த ஆகஸ்ட் 1 இல் புதிய நடைமுறையைச் செயல்படுத்த அறிவிப்பு ஆணை வெளியிட்டுள்ளது.

பயிர்க்கடன் பெற்ற கூட்டுறவுச் சங்கங்களில் அவ்வப்போது விவசாயிகள் கடனைப் புதுப்பிப்பதும், நிலத்தின் சிட்டா, அடங்கல், தடையில்லாச் சான்று ஆகியவற்றை வழங்கி, கடனை முழுமையாகச் செலுத்தாமல், பகுதி அளவில் செலுத்திப் புதுப்பித்தும், கூடுதல் கடன் பெற்று வந்தனர்.

இதனால் கூட்டுறவுச் சங்கங்களில் தவணை கடந்த கடன்தொகைகுறைவாக இருந்து வந்தது. தற்போது மத்திய அரசின் அறிவிப்பால், நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறையின்படி வாங்கிய முழுக் கடனையும் தங்கள் பகுதி கூட்டுறவு சங்கங்களில் செலுத்திவிட்டு, மீண்டும் கடன் வேண்டுவோர் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ‘மிர்ரர் அக்கவுண்ட்டில்’ பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது விவசாயிகளையும், கூட்டுறவுக் கடனை நம்பி உள்ள ஏழை, எளிய மக்களையும் கவலை அடையச் செய்து இருக்கின்றது.

புதிய நடைமுறையால் வாங்கிய முழுக் கடனையும் செலுத்த முடியாமலும், கூடுதல் கடன் பெற முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கொரோனா பேரிடரால் நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் முழுக் கடனையும் திருப்பிச் செலுத்தினால்தான், புதிய பயிர்க் கடன் பெற முடியும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு இருப்பது விவசாயிகளை வேதனைப்படுத்தும் நடவடிக்கை ஆகும்.

நகைக் கடன் வேண்டுவோர், கிராம கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து அதற்கான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு போய் நகர கூட்டுறவு வங்கிகள் அல்லது மத்திய கூட்டுறவு வங்கியில் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் விவசாயிகளை அலைக்கழிப்பது ஆகும்.

சம்பா பயிர் சாகுபடி தொடங்கி உள்ள நேரத்தில், விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாமல் தவிப்பதும், நடைக்கடன் கூட உடனடியாகக் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதும் கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்துள்ளார்.