மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு வைகோவின் ம.தி.மு.க. கடுமையான கண்டனம்.

வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று காணொளிக் காட்சியாக அடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


• மத்திய பா.ஜ.க. அரசு, செப்டம்பர் 18, 2020 அன்று மக்களவையிலும், செப்டம்பர் 20 இல் மாநிலங்களவையிலும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றி உள்ள மூன்று சட்டத் திருத்தங்கள் வேளாண் தொழிலையே முழுமையாகச் சீரழித்து, விவசாயிகள் வாழ்வையே சூறையாடும் ஆபத்தை உருவாக்கி இருக்கிறது.

வேளாண்மைதான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறது. அதனை உடைத்து எறிய முனைந்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை முறியடிக்க விவசாயிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு அறப்போராட்டத்தைச் சந்திக்கத் தயாராக வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. அறைகூவல் விடுக்கிறது.

• காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருப்பதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. கண்டனம் தெரிவிக்கிறது. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் கிடைப்பது கானல் நீராகப் போய்விடும்.

கர்நாடகத்தில் பா.ஜ.க. அரசு இருப்பதால், மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு ஒப்புதல் வழங்கிவிடும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருதுகிறார். மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

• மத்திய கலாச்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ‘இந்தியக் கலாச்சார’ தோற்றுவாய் 12 ஆயிரம் ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதற்கென தனியாக ஒரு நிபுணர் குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் அறிவித்தார். மத்திய அரசு அமைத்துள்ள இக்குழுவில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவில் தமிழகத்திலிருந்து எவரும் இடம் பெறாததும், சிறுபான்மையினர் மற்றும் தலித் சமூகத்தினர் ஒருவர்கூட சேர்க்கப்படாததும் பா.ஜ.க. அரசின் நோக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அதில் சங்பரிவாரங்களின் சிந்தனையாளர்களை இடம்பெறச் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இக்குழுவை கலைத்துவிட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களின் சார்பில் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் வேறொரு குழுவை அமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

• நாட்டின் எதிர்கால தலைமுறையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வித்துறையில் மாற்றம் செய்து. புதிய கல்விக் கொள்கையை வரையும்போது, நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விரிவான விவாதங்கள், கலந்தாய்வுகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், பாசிச பா.ஜ.க. அரசு எதேச்சாதிகாரமாக புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

மழலையர் பள்ளியிலிருந்து ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்படுவது அநீதியாகும். நவீன மனுதர்ம குலக்கல்வித் திட்டத்தை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கை - 2020 திரும்பப் பெறப்பட வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எடப்பாடி பழனிச்சாமி அரசு முற்றாக நிராகரிக்க வேண்டும். இதனைத் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

• மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வை திணித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி 2017, பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இரு சட்ட முன்வரைவுகளை குப்பைக் கூடையில் வீசி விட்டது. தமிழகத்தில் நீட் தேர்வின் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். நீட் தேர்வை ரத்து செய்திட மத்திய அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து வெற்றி கிட்டும் வரை போராட வேண்டும் என்பதை மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

• சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை இல்லாமலேயே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கிறது. இரண்டாவதாக குறிப்பிட சில திட்டங்களுக்கு அது செயல்படுத்தப்படும் பகுதிகளில் வாழும் மக்களிடம் கருத்துக் கேட்கத் தேவை இல்லை. மூன்றாவதாக நாட்டின் பாதுகாப்பு, சுரங்கம், கணிமவளத் திட்டங்கள் உள்ளிட்ட முகமையானத் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த மூன்று திருத்தங்கள் மூலம் மத்திய அரசு விரும்புகின்ற எந்தத் திட்டத்தையும், எந்த மாநிலத்திலும் எத்தகைய அனுமதி இன்றியும் செயல்படுத்த முடியும்.

தமிழ்நாட்டில் மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ ஆய்வகம், சேலம் -சென்னை எட்டுவழிச் சாலை, இரசாயன முதலீட்டு மண்டலம் அமைத்தல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த பா.ஜ.க. அரசு முனைந்திருப்பதால் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை -2020 திருத்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டிற்கு முற்றிலும் பேராபத்து விளைவிக்கும். இதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைத் திட்டவட்டமாக தெரிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.