எம்பியான இரண்டே வாரம்! ரூ.40 லட்சத்தில் புத்தம் புது கார்! ஜமாய்க்கும் வைகோ!

எம்பியாகி இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரூ.40 லட்சத்தில் கார் வாங்கியிருப்பது கட்சிக்காரர்களையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது.


கடந்த பல ஆண்டுகளாக வைகோ வெள்ளை நிறத்தில் போர்டு மற்றும் மிட்சுபிசி கார்களை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அவரை பார்ச்சூனர் காரில் பார்க்க முடிகிறது.

போர்டு மற்றும் மிட்சுபிசி நிறுவனங்களிடம் இருந்து வைகோ திடீரென டொயோட்டா நிறுவனத்திற்கு மாறியுள்ளார். வைகோ தற்போது வாங்கியுள்ள பார்ச்சூனர் காரின் அதிகபட்ச மாடல் விலை ரூ.40 லட்சம் என்கிறார்கள்.

வைகோ பயன்படுத்தும் பார்ச்சூனர் வகை காரைத்தான் தமிழிசை பயன்படுத்துகிறார். இதே போல் அமைச்சர்கள் பலரும் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு பார்ச்சூனர் கார்களையே பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் எம்பியாகி இரண்டே வாரங்களில் வைகோ ஏன் இப்படி புதிய காரை வாங்கினார் என்று தான் கேள்வி எழுகிறது. ஏற்கனவே காங்கிரசுக்கு எதிராக வைகோ பேசுவதையும் பாஜகவுடனான நெருக்கத்தையும் முடிச்சி போட்டு பலரும் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் வைகோ டெல்லி சென்று திரும்பியதும் 40 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கியிருப்பது தான் விவாதப் பொருள் ஆகியுள்ளது. இதனிடையே வைகோ கார் வாங்கியிருப்பது வங்கிக்கடனில் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் பனை மரத்துக்கு அடியில் நின்று பாலை குடித்தாலும் இந்த உலகம் கல் என்று தானே சொல்லும்.