மோடியின் வலது கரமான மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்!

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 59.


புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அனந்தகுமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அனந்தகுமார் நள்ளிரவு இரண்டு மணி அளவில் காலமானார். அனந்தகுமார் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

   கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர்களில் மிகவும் அதிகாரம் மிக்கவராக திகழ்ந்தவர் அனந்தாகுமார். கர்நாடக மாநிலத்தில் இருந்து தேசிய அரசியலில் கோலோச்சியவர். பா.ஜ.கவின் தேர்தல் பணிக்குழுவில் மிக முக்கிய பங்காற்றியவர். பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு உரிய வெகு சிலரில் அனந்தகுமாரும் ஒருவர். மேலும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவுக்கு வலது கரமாக செயல்பட்டு வந்தவர்.   கட்சி தொடர்பான விவகாரங்களை தீர்ப்பதில் வல்லவர் என்று பெயர் பெற்றவர். 59 வயதில் அனந்தகுமார் காலமாகியிருப்பது கர்நாடக மாநில பா.ஜ.கவினரை மட்டும் அல்லாமல் அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களுரு தெற்கு தொகுதி எம்.பியாக ஆறு முறை பதவி வகித்துள்ளார் அனந்தகுமார். வெங்கய்யா நாயுடு கவனித்து வந்த நாடாளுமன்ற விவகாரத்துறையை இவரிடம் மோடி வழங்கியதில் இருந்தே இவர் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று தெரிந்து கொள்ள முடியும்.

   முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அனந்தகுமார் விமான போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். பெங்களூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை ஆறு முறை போட்டியிட்டு ஆறுமுறையுமே வென்றுள்ளார் அனந்தகுமார்.

   கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்க காரணமாக இருந்தவர்களில் அனந்தகுமாரும் மிக முக்கியமானவர்.