வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் அவலம்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகம் முழுக்க 11.50 கோடி பேர் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படுவதாக, அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா மட்டுமின்றி, அதன் அண்டை நாடான நேபாளம், இதர கிழக்காசிய நாடுகள், கரீபியன் நாடுகள், லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில், சிறு வயதிலேயே, திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைப்பது வாடிக்கையாக உள்ளது.

இது மிகவும் வன்முறைத்தனமாக உள்ளதென்று, யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் காரணமாக, சம்பந்தப்பட்ட ஆண், பெண்களின் குழந்தை பருவம் வீணாக நேரிடுகிறது, அத்துடன், அவர்களால் குடும்ப பாரத்தையும் சுமக்க முடியாமல் போய்விடுகிறது, தாய்மை நிலை, குடும்பத் தலைவன் போன்றவற்றை சிறு வயதிலேயே ஒருவர் சுமப்பதால், அவர்களின் கல்வி தடைபட்டு, சரியான வேலைவாய்ப்பு கிடைப்பதும் பாதிக்க நேரிடுகிறது.

குறிப்பாக, வட இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் சிறு வயதினருக்கு திருமணம் செய்துவைப்பதை ஒரு சடங்காகவே மக்கள் பின்பற்றுகிறார்கள். இது மிகத் தவறான விசயம் என்று, யுனிசெஃப் சுட்டிக் காட்டியுள்ளது. ஓடியாடி விளையாட வேண்டிய பருவத்தில் ஒரு சிறுமியை 2, 3 குழந்தைகளுக்கு தாயாக்கி, வீட்டிலேயே வறுமையில் முடங்கச் செய்யும் செயல்தான் குழந்தை திருமணம் எனவும் யுனிசெஃப் கண்டித்துள்ளது.

இதன்படி, உலகம் முழுக்க 11.50 கோடி ஆண்களும்,  76.50 கோடி பெண்களும் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படுவதாக, யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, 1 முதல் 5 வயது வரையுள்ள சிறுமிகளை 20 முதல் 24 வயதுள்ள இளைஞருக்கு திருமணம் செய்து வைத்து, மிகவும் கொடுமையை சிலர் நிகழ்த்துகின்றனர் என்றும், யுனிசெஃப் சுட்டிக்காட்டியுள்ளது.