பங்கு சந்தையில் நுழையும் உஜ்ஜீவன் வங்கி! முதலீட்டாளர்களுக்கு லாபம் தருமா?

உஜ்ஜீவன் பைனான்சியல் சர்வீசஸ் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கி வருகிறது உஜ்ஜீவன் சிறு வங்கி,


பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி. நாடு முழுவதும் சுமார் 464க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் இதன் நிகர லாபம் 111 சதவீதம் உயர்ந்து 93 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 44 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்ததாக தெரிவித்துள்ளது இந்த வங்கி.

இந்நிலையில் பங்குச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது, சுமார் 9400 கோடி சொத்து மதிப்புடன் வங்கிச் சேவையில் ஈடுபட்டுள்ள உஜ்ஜீவன் சிறு வங்கி.

பங்குச் சந்தை புதிய வெளியீடுகள் மூலம் ரூ .750 கோடி அளவிற்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது இந்த வங்கி. ஏற்கனவே பங்கு வெளியீட்டிற்கான ஒப்புதலை கடந்த அக்டோபர் மாதம் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 4 வரை ஐபீஓ எனப்படும் சந்தைக்கு முந்தைய விற்பனை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஐபீஓ வில் இதன் பங்குகள் 36 ரூபாய் முதல் 37 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் ஐபீஓவில் ஒரு லாட் 400 பங்குகள் என்று நிர்ணயித்துள்ளது.

இந்த வங்கியின் பங்குதாரர்களுக்கு 2 சதவிகித தள்ளுபடியுடன் சுமார் 75 கோடி அளவுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது போக சில்லறை முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது இந்த வங்கி .

கோட்டக் மஹிந்திரா கேபிடல், ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் மற்றும் ஜேஎம் பைனான்சியல் ஆகியவை இந்த விற்பனையின் முன்னணி புரோக்கர்களாக உள்ளன.

மணியன் கலியமூர்த்தி