காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க கூடாது! உதயநிதி போர்க் கொடி!

சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது என்று மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிக தொகுதிகளைக் நாம்தான் வென்றுள்ளோம். நடைபெற உள்ள நாங்குநேரி இடைத்தேர்தலில் அந்தத் தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்க கூடாது. நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக தான் போட்டியிட வேண்டும்.

திமுக போட்டியிடும் பட்சத்தில் நாங்குநேரியில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். இதைப்போல் சட்டமன்ற தேர்தல் வரும் போதும் அதிக தொகுதிகளில் திமுக தான் போட்டியிட வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது. தனது தந்தை ஸ்டாலினை வைத்துக்கொண்டே உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார். திமுகவில் உதயநிதி ஸ்டாலின் எந்த பொறுப்பிலும் இல்லை.

ஆனால் ஸ்டாலினுக்கு அறிவுரை கூறும் வகையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது என்று பேசியுள்ளார். அதாவது கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. இதனை மனதில் வைத்து உதயநிதி இப்படி பேசியதாக சொல்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே கருத்தை திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். அதாவது சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட திமுகதான் 150 முதல் 170 தொகுதிகளில் போட்டியிடும் என்று அவர் கூறியிருந்தார். அப்போது கட்சித் தலைமை கூறுவதை எப்படி கூறலாம் என கூறி டிகேஎஸ் இளங்கோவன் இடமிருந்து செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.