மதுரையில் அமைதியாக இருக்கும் மு.க.அழகிரியை சீண்டுவது போல் மதுரை இளைஞர் அணியினர் வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி உதயநிதி ஸ்டாலினை வரவேற்றிருக்கிறார்கள். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அழகிரியை வம்புக்கு இழுக்கும் உதயநிதி..! ஸ்டாலினை மிரட்டியதற்கு பழி வாங்குகிறாரோ?

மதுரை மாவட்டம் சின்ன புளியங்குளம் கம்மாய் தூர்வாரி கரையை அகலப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கும் நிகழ்ச்சி வடக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக இன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் மகன் மு.க.அழகிரி மதுரையில் வசித்து வருகிறார். மதுரையில் தி.மு.கவுக்கு பெரும் பலமாக இருந்தவர் மு.க. அழகிரி. அழகிரியின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டும்போது “மதுரை அழகிரியின் கோட்டை” என்றே வாசகங்கள் அதில் இடம் பெற்றிருக்கும்.
பிறகு ஏற்பட்ட உட்கட்சி விவகாரங்களால் மு.க. அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போறுப்பேற்ற பிறகு திமுக இளைஞரணி தலைவராக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி போஸ்டர் அடித்த திமுகவினர், “உங்கள் பெரியப்பா மு.க.அழகிரியின் கோட்டைக்குள் நுழையும் உதயநிதி அவர்களே வருக!” என வாசகங்கள் இடம் பெற செய்துள்ளனர்.
அழகிரியின் கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த மதுரை இனி அப்படியில்லை என்று, அழகிரியை கிண்டல் செய்ய இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மு.க அழகிரியை வம்பிழுக்கும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் இதுபோல் போஸ்டர் ஒட்டியுள்ளதாக சில கட்சித் தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர்.