சீண்டிய இளைஞர்கள்! சீறிய இளம் மாணவி! தலையில் பைக்கை ஏற்றிய கொடூரம்!

பதினோராம் வகுப்பு படிக்கும் சிறுமியை இளைஞர்கள் பைக்கை ஏற்றி கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி அன்றாடம் சைக்கிளில் பள்ளி சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இவ்வாறு அவர் பள்ளி சென்று வீடு திரும்புகையில் மூன்று இளைஞர்கள் தெருமுனையில் நின்று கொண்டு அந்த சிறுமியை கேலி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 8 ஆம் தேதி அன்று பள்ளி விட்டு வீடு திரும்பிய மாணவியை அவர்கள் கிண்டல் செய்ததால் அந்த மாணவி கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து அங்கு அனைவரும் திரளவே மூன்று இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

கூட்டம் கலைந்த பின்னர் மீண்டும் அந்த இடத்திற்கு வந்த அவர்கள் மாணவியை கிண்டல் செய்த அதோடு கீழே தள்ளி இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளனர். அந்தச் சிறுமியின் தலையில் மீதும் ஈவு இரக்கமின்றி இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கி உள்ளனர்.

பலத்த காயமடைந்த அந்த சிறுமி விரைவாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.இதையடுத்து லம்புவா  காவல்நிலையத்தில் சிறுமியின் தாத்தா புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை எடுத்துக்கொள்ள போலீசார் மறுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி அன்று அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான இளைஞர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்று புகார் எழுந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.