திண்டுக்கல்லில் இருச்சக்கர வாகனம் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கலில் கோரம் ! பைக்கில் விபரீத சாகசத்துடன் பேருந்தை முந்த முயன்று பலியான 3 கல்லூரி மாணவர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 3 கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடிந்து இருச்சக்கர வாகனத்தில் மூவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது விளையாட்டுத்தனமாக முன்னதாக சென்ற அரசு பேருந்தை அவர்கள் முந்திச் செல்வதற்காக ஓரமாக வந்துள்ளனர். அதே சமயம் எதிரே வேகமாக வந்த சரக்கு வேன் மீது கல்லூரி மாணவர்கள் சென்ற இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து அடிபட்ட மாணவர்களை காப்பாற்ற சென்றுள்ளனர். விபத்து நடந்த உடனேயே சரக்கு வேன் டிரைவர் கீழே இறங்கி தப்பித்து ஓடிவிட்டதாக தெரிகிறது.
இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அலெக்ஸ், கேசவன், லட்சுமிபதி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் இது தொடர்பாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர், மாணவர்களின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான வேன் ஓட்டுனரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.