வளைவில் திடீரென திரும்பிய பைக்! எதிரே அதிவேகத்தில் வந்த பஸ்! நொடியில் நேர்ந்த விபத்தில் 2 பேருக்கு நேர்ந்த விபரீதம்!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ராமகிரி கிராமத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரன். இவர் ஒரு பொறியாளர். இவர் கோவையில் வேலை பார்த்து வந்துள்ள நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்படவே முத்துக்குமார் என்பவரை அழைத்துக்கொண்டு புளியம்பட்டி கிராமததிற்கு சிகிச்சைக்காக சென்றார்.

பின்னர் சிகிச்சை முடிந்தும் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கிராமத்திற்குள் நுழைய வலதுபுறம் வாகனத்தை திருப்பி உள்ளனர். அப்போது எதிரே கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்து, 2 பேரும் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தை கடுத்து பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில உமாமகேஸ்வரன், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த குஜிலியம்பாறை போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான முத்துக்குமாருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். உமா மகேஸ்வரனுக்கு பிரசன்ன குமாரி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

அதிவேகமாக செல்வதற்காகத்தான் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகிறது. எனவே இடைஇடையே திரும்புபவர்கள் 20 வினாடி காத்திருந்து கனரக வாகனங்கள் சென்றபிறகு சென்றால் விபத்தை தவிர்க்கலாம். அதைவிட்டு நாம் விருப்பப்படி செல்வோம்.அதிவேகமாக வரும் வாகனங்கள் நமக்காக உடனடியாக பிரேக் அடிக்கவேண்டும் என்பது முறையல்ல என்பதே பலரின் கருத்து.

வயிற்றுவலியால் உயிரிழந்துவிடக்கூடாது என எச்சரிக்கையோடு மருத்துவமனைக்கு சென்றவர் வாகனம் ஓட்டும்போது கவனக் குறைவாக இருந்ததால் அந்த உயிர் பயிர்போன சம்பவத்தால் இங்கு யாருக்கும் மகிழ்ச்சி இல்லை.