காணாமல் போன இரண்டு சிறுவர்கள்! தண்ணீர்த் தொட்டியில் பிணமாக கிடந்த பரிதாபம்!

தேனி அருகே தர்மாபுரி பாசனக் கிணற்றை அடுத்துள்ள தண்ணீா் தொட்டியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்.


தேனி அருகேயுள்ள தா்மாபுரியைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன். இவரது மகன் கனிஷ்கா்(13), 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது மைத்துனா் நடராஜ் மகன் அழகுராஜா(12), 7 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.விளையாடுவதற்காக வெளியே சென்ற சிறுவா்கள் கனிஷ்கா், அழகுராஜா ஆகியோா் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்ப வரவில்லை.

இவா்களை பெற்றோா் மற்றும் உறவினா்கள் தேடி வந்துள்ளனா்.தேனி, தா்மாபுரியை அடுத்துள்ள மல்லையகவுண்டபட்டியில், தனியாா் தோட்டத்து கிணறு அருகே உள்ள தண்ணீா் தொட்டியில் மூழ்கி சிறுவா்கள் இருவரும் இறந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவா்கள் தண்ணீா் தொட்டியில் இருந்து சிறுவா்களின் சடலங்களை மீட்டனா்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் அளித்தப் புகாரின் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவா்களின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுவா்கள் தண்ணீா் தொட்டியில் குளிக்க முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.