இரட்டை இலை வழக்கு! தினகரனை நெருக்கும் டெல்லி போலீஸ்!

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் டெல்லி போலீசார் காய் நகர்த்தி வருகின்றனர்.


அ.தி.மு.க இரண்டாக உடைந்ததை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு செய்த தினகரன் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் எனும் இடைத்தரகர் மூலமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது.

   இந்த வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தினகரனும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது இரட்டை இலை சின்ன வழக்கில் ஜாமீனில் இருக்கும் தினகரன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். ஜாமீனில் வெளியான பிறகு இந்த வழக்கு தொடர்பாக தினகரனை டெல்லி போலீசார் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

   முதல் குற்றப்பத்திரிகையில் கூட தினகரன் பெயரை டெல்லி போலீஸ் சேர்க்கவில்லை. இதனால் இந்த வழக்கில் தினகரன் மீதான பிடியை டெல்லி போலீஸ் தளர்த்திக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் 2வது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் சேர்க்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இரட்டை இலை சின்ன வழக்கில் தினகரன் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக அறிவித்தது.

   மேலும் டெல்லி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை தினகரன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரரணைக்கு வந்த போது தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றச்சதி, ஆதாரங்களை அழித்தல், ஊழல் தடுப்பு ஆகிய பிரிவுகளில் தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கும் மீண்டும் வரும் 17ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்று முதல் தொடர்ந்து இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. அந்த வகையில் தினகரன் வழக்கு விசாரணையை முடுக்கிவிட்டு விரைவில் தீர்ப்பை பெற டெல்லி போலீசார் முழு வீச்சில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

   மேலும் ஒவ்வொரு விசாரணைக்கும் தினகரனை நேரில் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் அளவுக்கு நெருக்கடி கொடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை பெற வேண்டும் என்பதில் டெல்லி போலீசார் உறுதியுடன் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே சுகேஷ் மற்றும் தினகரன் பேசிய ஆடியோ ஒன்று தான் இந்த வழக்கில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

  அந்த ஆடியோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கின் போக்கு மாறும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தினகரனுக்கு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் அதிக நெருக்கடி ஏற்படும் என்று டெல்லி கருதுவதாக கூறப்படுகிறது.