மே 29ல் அண்ணன் தான் முதல்வர்! சூடு கிளப்பும் தினகரன் ஆதரவாளர்கள்!

தேர்தல் முடிவு எப்படி வருமோ என்று முதல்வர் எடப்பாடி கலக்கத்தில் இருக்கிறார். ஆட்சியைப் பிடிக்க முடியுதோ இல்லையோ, கலைச்சாவது விடணும் என்று ஸ்டாலின் பிடிவாதமாக இருக்கிறார்.


ஆனால், இவர்கள் இருவரையும் கண்டுகொள்ளாமல், ‘மே 29ம் தேதி தமிழக முதல்வராக தினகரன் பொறுப்புக்கு வர்றார், குறிச்சு வைச்சுக்கோங்க என்று தெறிக்க விடுகிறார்கள் அ.ம.மு.க. நிர்வாகிகள்.என்னவாம் அவர்களுக்கு..?

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் கட்சிக்கு நிச்சயம் 12 தொகுதிகள் கிடைக்கிறதாம். மத்தியில் நிச்சயம் தொங்கு பாராளுமன்றம்தான் அமையப்போகிறது. அப்படிப்பட்ட சூழலில் தினகரன் கட்சி எம்.பி.க்கள் 12 பேர்  யாருக்கு கை காட்டுகிறார்களோ, அவர்கள்தான் அடுத்த பிரதமர் ஆக முடியுமாம். அப்படி ஆகிவிட்டால்... என்னாகும்?

அடுத்த பிரதமர் யார் என்பதற்கு ஆதரவளிக்கும் தினகரனுக்கு, கைமாறாக தமிழக முதல்வர் பதவி வாங்கித்தர வேண்டுமாம். இப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஆட்சி நிலைத்து நின்றால் போதும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். அதனால் மோடியே ஆட்சிக்கு வந்தால், தினகரனை பதவியில் உட்கார வைப்பார் என்று சொல்கிறார்கள்.

மோடி சொல்லும்போது அதனை எதிர்த்துப் பேசுவதற்கு எடப்பாடியாலும், பன்னீர்செல்வத்தாலும் முடியாது. ஏனென்றால், அவர்கள் இருவர் மீதும் அத்தனை வழக்குகள் இருக்கிறது. மோடி சொல்வதைக் கேட்கத்தான் வேண்டுமாம். அதனால் தேர்தல் முடிவு வந்ததும் மே 27ம் தேதி தமிழக முதல்வராக தினகரன் பதவி ஏற்பாராம். அவரது ஜாதகமும் அப்படித்தான் சொல்கிறதாம்.

அதெல்லாம் சரி, 12 சீட் கண்டிப்பாக தினகரனுக்குக் கிடைக்கும் என்று சொன்னது யாராம்... உளவுத் துறையா அல்லது தனியார் நிறுவனம் மூலம் கருத்துக்கணிப்பு எடுத்திருக்கிறார்களா என்று நிர்வாகிகளிடம் கேட்டோம். அவர்களிடம் 12 சீட் நிச்சயம் ஜெயிப்போம் என்று சொன்னது, வேறு யாரும் இல்லையாம். அவங்க தினகரனேதானாம்.

அடங்க மாட்டேங்கிறாங்களேப்பா...