ஸ்டாலின் தரப்பை தொடர்பு கொண்ட டிடிவி! எடப்பாடி அரசை கவிழ்க்க வியூகம்!

சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு திமுக தரப்பிற்கு டிடிவி தரப்பிலிருந்து தூது சென்று உள்ளது.


இடைத்தேர்தலில் வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் சட்டப்பேரவையில் திமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதைப்போல் நாங்குநேரி எம்எல்ஏவும் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டார். இதனால் சட்டப்பேரவையில் எதிர்க் கட்சிகளின் பலம் மேலும் குறைந்து போனது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிச்சயமாக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று கூறியிருந்தார்.

சுயேச்சை எம்எல்ஏ வன தினகரனுக்கு ஆதரவாக தற்போது இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். வெறும் மூன்று எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர முடியும் என்கிற கேள்வி எழுந்தது. இது குறித்து தினகரன் தரப்பிடம் விசாரித்தபோதுதான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் திமுக கொண்டு வரும் என்றும் அதற்கு ஆதரவாக தானும் தனது ஆதரவை எம்எல்ஏக்களும் வாக்கு அளிக்கும் வகையில் தினகரன் வியூகம் வகுத்து உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மிகச்சரியாக 118 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது. இரண்டே இரண்டு எம்எல்ஏக்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது மாற்றி வாக்களித்துவிட்டு எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும். எனவே எப்படியாவது அந்த இரண்டு எம்எல்ஏக்களை தான் அழைத்து வந்து விடுவதாகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மட்டும் செய்யுமாறும் தினகரன் தரப்பிலிருந்து ஸ்டாலின் தரப்புக்கு தூது சென்ற உள்ளது. மேலும் தற்போதும் தன்னுடைய ஆதரவாளர்கள் அதிமுக எம்எல்ஏக்கள் ஆக இருப்பதாகவும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது நிச்சயமாக அவர்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

தினகரன் தரப்பின் இந்த அப்ரோச் திமுக தரப்பை பெரிய அளவில் கவரவில்லை என்கிறார்கள். ஏற்கனவே தேர்தலில் தோல்வி அடைந்துள்ள தினகரனுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று நம்ப திமுக தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே தனது சொந்த முயற்சியில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் யாரையாவது எதிர் நிலைப்பாடு எடுக்க வைக்க முடியுமா என்று திமுக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் வலையில் விழுந்தால் தினகரன் உதவியுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர ஸ்டாலின் தயாராகவே இருப்பதாக திமுக தரப்பு கூறுகிறது.