அமெரிக்காவில் மோடியை பாராட்டிய டிரம்ப், மும்பைக்கு வர்றாராம்! ஜால்ரா மேளம் ரெடியா?

அமெரிக்காவுக்கு மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணம் செம ஹிட். கிட்டத்தட்ட 20 நாடுகளைச் சேர்ந்த இந்தியர்கள் அங்கே வந்திருந்தனர். கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


50 ஆயிரம் என்றால் அதிசயமா என்று கேட்கக்கூடாது. ஏனென்றால், அது இந்தியா அல்ல. நம்ம ஊரில் லோக்கல் கட்சியினர் போராட்டம் நடத்தினால்கூட 50 ஆயிரம் பேரை எளிதாகக் கூட்டிவிடுவார்கள். அமெரிக்காவில் விளையாட்டு தவிர வேறு எந்த விஷயங்களுக்காகவும் இத்தனை பேர் கூடுவதில்லை. அதனால் இந்த நிகழ்வு மிகவும் பெரிதாக கொண்டாடப்பட்டது.  

ஏராளமான மொழி மக்கள் ஒன்றுகூடியிருந்தனர். அதனால் அனைவரையும் கவரும் வகையில் இந்தி, ஆங்கிலம், பெங்காலி, தமிழிலும் பேசினார். 'எல்லாம் சவுக்கியமா?' என்று கூட்டத்தினரை பார்த்து கேட்டார். உடனே கூட்டத்தில் இருந்த திரளான தமிழர்கள் ஓவராக கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 

தொழில்துறையில் இந்தியர்களுக்கு சாதகமான பல வாக்குறுதிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்தியாவை முன்னேற்றுவது குறித்த நம்பிக்கை ஊட்டும் வகையில் மோடியும் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், இது டிரம்புக்கு தேர்தல் பிரசாரம் போலவே இருந்தது என்பதுதான் அமெரிக்கர்களின் எண்ணம்.

மோடிக்குப் பாராட்டியதைப் போன்று தனக்கும் இந்தியாவில் பாராட்டு கிடைக்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, டிரம்ப் அடுத்த மாதம் மும்பைக்கு வர்றாராம். எந்த அளவுக்கு பாராட்டுறதுன்னு தெரியலையே.