நள்ளிரவில் பெண்கள் முன்னிலையில் அரசியல் கொலை! பதற வைக்கும் துப்பாக்கிச் சூடு வீடியோ!

மேற்கு வங்க மாநிலத்தில் தேனீர் கடை ஒன்றில் திரினாமூல் காங்கிரஸ் உள்ளூர் நிர்வாகி ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வடக்கு டம்டம் பகுதி திரினாமூல் காங்கிரஸ் தலைவரான நிர்மல் குண்டு தேநீர் கடை ஒன்றில் பெண்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தி இரு நபர்கள் வந்த நிலையில் பின்னால் அமர்ந்திருந்தவர் நிர்மல் குண்டுவை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். 

இதில்  நிர்மல் குண்டு சரிந்து விழுவதும் இருசக்கர வாகனம் கூட்டத்தினரைக் கடந்து வேகமாகச் சென்று மறைவதுமான காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன. படுகாயம் அடைந்த நிர்மல் குண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

கொலைக்கு பா.ஜ.க.வே காரணம் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டும் நிலையில் அதனை மறுத்துள்ள  பா.ஜ.க. மாநில தலைவர் திலிப் கோஷ், திரிணாமூல் காங்கிரசுக்குள் உள்கட்சி மோதலே கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் கொலைக்கு காரணமானவர் எனக் கூறி ஒருவரின் வீட்டை அப்பகுதி மக்கள் சூறையாடியுள்ளனர். 

2014-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க. தற்போது 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே  மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.