தந்தூரி சிக்கன் சாப்ட்ருப்பீங்க! தந்தூரி டீ அடிச்சிருக்கீங்களா? திருச்சியை கலக்கும் என்ஜினியரிங் டீ மாஸ்டர்!

திருச்சி அருகே தந்தூரி டீ விற்பனைக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது.


திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ளது அரேபியன் தந்தூர் சாய் கடை. இங்கு, அரேபியன் பாணியில் தரப்படும் டீயை குடிக்க, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அவ்வழியே வரும் பாதசாரிகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த கடையை முகமது அஸ்லாம் என்பவர் நடத்தி வருகிறார்.

இன்ஜினியரிங் படித்துள்ள இவர், வேலை இல்லாத காரணத்தால், பல இடங்களில் அலைந்து திரிந்துவிட்டு, ஒரு கட்டத்தில், வட இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது போல, தந்தூரி டீ விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார். 

இவரது தந்தை டீ தூள் விற்பனை செய்வதால் அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், குடும்பத்தினருடன் உதவியோடு சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்த அரேபியன் தந்தூர் சாய் கடையை, அஸ்லாம் திறந்துள்ளார். ஒரு டீ விலை ரூ.10 என நிர்ணயித்த நிலையில், ஆரம்பம் முதலே கூட்டம் அளவுக்கு அதிகமாக வருகிறது என்று, அஸ்லாம் குறிப்பிடுகிறார்.

வழக்கமாக விற்கப்படும் டீயில், கரம் மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் தந்தூர் சாய்க்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். அத்துடன், இவர்கள் டம்ளருக்கு பதிலாக, மண் குவளைகளை பயன்படுத்தி, தந்தூர் சாய் பரிமாறுகின்றனர். இது மண்பொருள் தயாரிப்பவர்களையும் ஊக்குவிப்பதாக உள்ளது. தந்தூர் சாய் மட்டுமில்ல, பச்சை மிளகாயை கீறி சர்பத்தில் கலந்து, குலுக்கி சர்பத் என்ற பெயரில் தருகின்றனர். 

இது இனிப்பு, காரம் என இரட்டைச் சுவையுடன் இருப்பதால், வாடிக்கையாளர்கள் கூட்டம் இந்த கடையில் அலைமோதுகிறது. இதேபோல, குலுக்கி பூஸ்ட், தட்டு வடை, குவளை குல்பி என விதவிதமான தயாரிப்புகளை இவர்கள் அறிமுகம் செய்கின்றனர். கடை திறந்து சில மாதங்களிலேயே, புத்தூர் நால்ரோடு பகுதியில் பிரபலமான கடையாக இந்த கடை மாறிவிட்டது. 

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள், என்ற முதுமொழிக்கு ஏற்ப, இந்த கடையின் செயல்பாடு உள்ளது என்றால் அது மிகையல்ல.