கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை! இளம் கணவனுக்கு நேர்ந்த விபரீதம்! தவிக்கும் இளம் மனைவி!

புதுமாப்பிள்ளையை லாரி வடிவில் தேடி வந்த எமன்; திருமணமான 2 நாட்களில் விபத்தில் மரணம்


திருச்சி மாவட்டம் லால் குடி அருகே லாரி விபத்தில் புதுமாப்பிள்ளையும், நண்பனும் உயிரிழந்த நிலையில் மணப்பெண் உயிருக்கு போராடி வருகிறார். லால்குடியை அடுத்த நெருஞ்சலக்குடியைச் சேர்ந்தவர்  27 வயது மோகன். இவருக்கும் முள்ளிக்கருப்பூர் கிராமத்தை சேர்ந்த ரமணி என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

இனிய இல்லறத்தை இனிதே தொடங்கிய அவர்களுக்கு அது விரைவிலேயே முடிவுக்கு வரப்போகிறது என தெரிந்திருக்கவில்லை. நேற்று இரவு முள்ளிக்கருப்பூர் கிராமத்திலிருந்து புதுமண தம்பதிகளும், மோகனின் நண்பர் ரஞ்சித்தும் இருசக்கர வாகனத்தில் லால்குடிக்கு சென்றனர்.

வாளாடி என்ற இடத்தில் உள்ள சிவன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்த போது லாரி வடிவில் வந்த எமனை, சிவனும் தடுக்கத் தவறிவிட்டார். அரியலூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்று, முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கரவாகனத்தில் மோதியதில், 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

விழுந்த வேகத்தில் லாரியில் மோதி மோகன், ரஞ்சித் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ரமணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர்.