எப்ப பார்த்தாலும் பின்னாடியே வர்றானுங்க..! முகத்துல கர்ச்சீப் கட்டியிருக்கானுங்க..! திருநங்கை வேட்பாளருக்கு திக் திக் அனுபவம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் திருநங்கை வேட்பாளரை மர்மநபர்கள் சிலர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாகர்கோவில் அருகே சகாய நகர் ஊராட்சி மன்றத் தலைவராக திருநங்கை ராபியா என்பவர் போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரம் செய்யும்போது மோட்டார் சைக்கிளில் சில இளைஞர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்து மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டிஉள்ளார். 

இதுகுறித்து ராபியா கூறுகையில், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எனக்கு பூட்டு சாவி சின்னம் கொடுத்துள்ளார்கள். எனக்கு பொதுமக்களின் ஆதரவும் உள்ளது. வாகன பிரசாரத்துக்குச் செல்லும்போது முகத்தில் கர்ச்சீப் கட்டி மறைத்துக்கொண்டு சிலர் எங்களைப் பின் தொடர்கிறார்கள்.

திருநங்கை என்றாலே தப்பானவர்கள் எனக் காட்டுவதற்காக அவர்கள் எங்களைப் பின் தொடர்கிறார்கள் என நினைக்கிறோம். வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கும்போதும் அவர்கள் பின் தொடர்கிறார்கள். யார் என கேட்க நெருங்கி சென்றால் பைக்கை திருப்பிக்கொண்டு வேகமாகச் சென்றுவிடுகிறார்கள்.

இதனால் தனக்கும் தன்னுடன் வருபவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ராபியா தெரிவித்துள்ளார். எனவே இந்த மிரட்டல் தான் திருநங்கை என்பதாலும், ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதற்காகவும்தான் என தெரிவித்த ராபியா, இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.