நிறைந்த வளர்பிறையான நாளை திமுகவின் மாநில இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளார்.
வளர்பிறையில் பட்டாபிஷேகம்! நாளை திமுக இளைஞர் அணிச் செயலாளர் ஆகிறார் உதயநிதி!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் சூறாவளியாக பிரச்சாரம் செய்தவர் உதயநிதி. அதற்கு முன்பு வரை திமுக பொதுக்கூட்டங்களில் கூட கீழே அமர்ந்து கலந்து கொண்டவர் உதயநிதி. திமுக மாநாடுகளில் பங்கேற்றாலும் கூட உதயநிதி பேச அனுமதிக்கப்பட்டதில்லை.
ஆனால் கலைஞர் மறைவுக்கு பிறகு காட்சிகள் மாறின. உதயநிதிக்கு கட்சிக் கூட்டங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. திமுக நிகழ்ச்சிகளில் உதயநிதிக்கு கட் அவுட்கள் வைக்கப்பட்டன. மாவட்ட திமுக அலுவலகங்களில் உதயநிதி புகைப்படங்கள் மாட்டப்பட்டன.
அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதி ரசிகர் மன்றம் துவங்கப்பட்டது. நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக வந்த நிலையில் உதயநிதியை தீவிர அரசியலில் களம் இறக்க ஸ்டாலின் முடிவு செய்தார்.
அதன்படி தனது அரசியல் வாழ்வை தொடங்கியது போல் தனது மகனும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் இருந்து அரசியல் வாழ்வை தொடர வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இதனால் உதயநிதியை மாநில இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு நியமிக்க ஸ்டாலின் முடிவெடுத்தார்.
ஜூன் மாத இறுதியிலேயே இதற்கான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் தேய்பிறை என்பதால் வேண்டாம் என்று துர்கா ஸ்டாலின் கேட்டுக் கொள்ள தற்போது நாளை அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு இன்று முதலே ஸ்டாலின் வீடு களைகட்ட ஆரம்பித்துள்ளது.
திமுக இளைஞர் அணிச் செயலாளர் ஆன பிறகு சினிமாவிற்கு குட் பை சொல்லிவிட்டு முழு நேர அரசியல்வாதி ஆக உதயநிதி முடிவெடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இதனால் திமுகவிற்குள் தற்போது முதலே பரபரப்பான பேச்சுகள் அடிபட ஆரம்பித்துள்ளன.