நாளைக்கு மாற்றுத் திறனாளிகள் தினம்! ஒருவருக்காவது உதவி செய்வோம்!

டிசம்பர் 3ம் தேதியை மாற்றுத் திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உள்ளது. இந்த தினத்தை கண்ணியமிக்க வகையில் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலக தினம் என்பது, வார்த்தைகளையும், உத்தரவாதங்களையும் கொண்ட சம்பிரதாயமான ஒன்றாக கருதி இருந்துவிடாமல் இந்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள் அடைய, அனைத்து தரப்பினரும் ஆதரவும் வாய்ப்பும் நல்க வேண்டும். 

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு, ‘இந்தியாவில் கல்வி நிலைமை-2019’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு மாநில அரசுகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பில் இருந்து தவறியுள்ளது என பதிவு செய்துள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட சில பணிகள் முன்னுரிமையில் வழங்க வேண்டும் எனவும், 4 மணி நேர பணிக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற விதிகள் அமலாகவில்லை. ஊனமுற்றோர் துறைக்கான மானிய கோரிக்கையில் நாட்டின் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு வெறும் 134 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுடைய மாத உதவித்தொகைக்காக மத்திய அரசின் பங்கு வெறும் ரூ.300 என்பதாகவே நீடிக்கிறது. நாடு முழுவதும் மாற்றுத்திறன் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

தமிழகத்திலும், ஆளும் அதிமுக அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலன்களை சட்ட உரிமைகளின் அடிப்படையில் அணுக தொடர்ந்து மறுத்து வருவதை காண முடிகிறது. ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016ஐ உளப்பூர்வமாக அமல்படுத்த மறுக்கிறது. 

நாடு தழுவிய அளவிலும் தமிழகத்திலும் இருக்கிற சட்ட உரிமைகளையாவது நிறைவேற்றுங்கள் என மாற்றுத்திறனாளிகளின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் தினத்தை பாராட்டுவதும் கொண்டாடுவதும் முக்கியம் அல்ல. அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து அவர்கள் இயல்பாக வாழ வழி காட்ட வேண்டும் என்பதுதான்.