உருவானது மேலடுக்கு சுழற்சி..! 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போவுது கனமழை..! எங்கெங்கு தெரியுமா?

தமிழத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தினால் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவின் அச்சத்தில் உள்ள மக்களுக்கு இந்த செய்து ஒரு நற்செய்தியாக அமையும்.


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வறண்ட வானிலை நிலவி வருகின்றது. இந்த சூழ்நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் நேரத்தில், தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த சில மாவட்டங்களிலும்  நேற்று சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்து அங்கு உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 3 செமீ மழை பெய்திருக்கிறது. நீலகிரி மாவட்டம் கெட்டி மற்றும் குன்னூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் 2 செமீ மழை பொழிந்ததுள்ளது.

இதனையடுத்து, தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று நாளை முதல் தமிழகத்திற்கு தொடர்ந்து 5 நாட்கள் நல்ல மழை பெய்ய போவதாக தெரிவித்திருந்தார். பின்னர் இன்று சென்னை வானிலை மையமும் மழை நிலவரம் குறித்து அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் தமிழகத்தில் நிலவிவரும் தொடர் வெப்பத்தினால் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெப்பசலனத்தினால் நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற மாவட்டங்களை பொறுத்த வரையில் வறண்ட வானிலை நிலவும், தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 11-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தாலும் பெறும் அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.