இன்று ராஜீவ் நினைவு நாள்! விடுதலைப்புலிகளுக்குத் தோல்வி தொடங்கிய நாள்!

தமிழர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத மரணம், தமிழ் மண்ணில் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்டது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ராஜீவ் காந்தியை தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் கொலை செய்தனர்.


அன்றைய தினம் வரை விடுதலைப் புலிகள் தமிழகத்தின் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்தனர். தமிழகத்தில் துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டுக்கொண்டாலும், அவர்களுக்குச் செய்யவேண்டிய உதவிகளை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் போட்டி போட்டுக்கொண்டு செய்தனர். தமிழகத்தில் இருந்து பெட்ரோல் முதலான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையின்றி படகு மூலம் சென்றுவந்தது.

இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் அடைப்படையில், இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றதுதான் பிரச்னைக்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது. அதுவரை இந்திய அரசு பிரபாகரனுக்கு ஆயுத சப்ளை செய்ததுடன், போர்ப் பயிற்சியும் அளித்துவந்தது.

இந்தியாவின் அன்பும் ஆதரவும் ஒரே நாளில் விலக்கிக்கொள்ளப்பட்டது. இது ஒரு துன்பியல் சம்பவம் என்று பிரபாகரன் சர்வசாதாரணமாக கடந்துபோனார். ஆனால், அன்று அவர் எடுத்த தவறான ஒரு முடிவால் முள்ளிவாய்க்காலில் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் செத்துப்போனது, விடுதலைப் புலிகள் என்ற இயக்கமே குழி தோண்டி புதைக்கப்பட்டது. இந்தியப் பிரதமரை கொல்வதற்கு செய்த முயற்சியை, இலங்கை அதிபரைக் கொல்வதில் காட்டியிருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும், என்ன செய்வது தமிழர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.