கட்டுப்பாட்டை இழந்த லாரி நேராக பஸ்ஸில் மோதியது. திருப்பூர் கோர விபத்தில் 20 பேர் பலி... படு காயத்துடன் 25 பேர்

தலைநகர் சென்னையில் படப்பிடிப்பில் மூன்று பேரை பலிகொண்ட விபத்தின் சோகம் மறையாதநிலையில், அவினாசி அருகில் பேருந்தும் லாரியும் மோதியதில் 20 பேர் நிகழ்விடத்திலேயே பரிதபமாக இறந்துபோயினர்.


கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரளத்தின் ஆழப்புழையை நோக்கி அம்மாநில அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் அது சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் சேலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பெரிய லாரி ஒன்று பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இந்தக் கோர விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலுமாக உருக்குலைந்தது. 20 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த 25 பேர் திருப்பூர் மற்றும் அவினாசி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டுவருகிறார்.

விபத்துக்குக் காரணமான சரக்குப்பெட்டக லாரியில் கோவையில் ஏற்றப்பட்ட டைல்ஸ் கற்கள் இருந்ததுடன், கட்டுப்பாட்டையும் இழந்ததால் கண்டபடி ஓடி, பேராபத்து வேகத்துடன் மோதியதே இவ்வளவு உயிரிழப்புக்குக் காரணம் என தப்பியவர்களை மேற்கோள் காட்டி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.