ஐஐடி நுழைவுத் தேர்வில் நெசவாளர் மகனின் மகத்தான சாதனை! திருப்பூருக்கே பெருமை!.

ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்வி பயில்வதற்கான JEE நுழைவுத் தேர்வில், கைத்தறி நெசவாளரின் மகன் மகத்தான சாதனை படைத்துள்ளார்.


திருப்பூரை அடுத்துள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி - தனலட்சுமி தம்பதியினர். இவர்கள் கைத்தறி நெசவாளர்கள். இவர்களின் மகன் சபரிநாதன். கைத்தறி நெசவை செய்தபடியே அரசுப் பள்ளியில் படித்து வந்த சபரிநாதன் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 484 மதிப்பெண்கள் எடுத்தார்.

பின்னர் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சபரிநாதன் 573 மதிப்பெண்கள் எடுத்தார். மருத்துவம் மற்றும் பொறியியல் கனவில் இருந்த சபரிநாதன் இதற்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை எழுதினார். இதில் ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான ஜேஇஇ தேர்வில்  91.29 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார் சபரிநாதன்.

திருப்பூரில் அரசுப் பள்ளியில் படித்து ஜே.இ.இ. தேர்வில் 91.29 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்ற ஒரே மாணவர் சபரிநாதன் தான் என்று கூறப்படுகிறது. அதிலும் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்த இலவச பயிற்சி மையம் மூலம் பயின்று சபரிநாதன் இந்த சாதனையை படைத்துள்ளார். தனது ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு அவர் நன்றி கூறியுள்ளார்.