டைம்ஸ் தமிழ் 2019 சினிமா விருதுகள். சிறந்த நடிகை நயன்தாராவா அல்லது சமந்தாவா?

மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2019வது ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.


2019ம் ஆண்டின் சிறந்த நடிகை யார் என்பதைப் பார்க்கலாம். நடிகருக்குப் போன்று நடிகைகளுக்குள் மிகப்பெரும் போட்டி எதுவும் இல்லை. விஸ்வாசம் படத்தில் நயன் தாரா, அழகு களஞ்சியமாகவும், அதே நேரம் நல்ல அம்மாவாகவும் நடத்தி அசத்தியிருந்தார். சூப்பர் டீலக்ஸ் படத்தில், கள்ளக்காதலனுடன் கொஞ்சிக் குலாவும் குடும்பத் தலைவியாக நடித்திருந்தார் சமந்தா. ராட்சசி படத்தில் ஜோதிகா அநியாயத்துக்கு மிரட்டியிருந்தார். கேம் ஓவர் படத்தில் டாப்ஸி, பல்வேறு உணர்வுகளைக் கொட்டி நடித்திருந்தார்.

கேம் ஓவர் படம் தமிழா, ஹிந்தியா, தெலுங்கா என்ற குழப்பம்ட ஏற்படுவதாலே டாப்ஸியை தவிர்த்துவிட்டுத்தான் மற்றவர்களைப் பார்க்கவேண்டி இருக்கிறது. அதேபோல்,ஜோதிகாவின் நடிப்பு இப்படித்தான் இருக்கும் என்று எழுதப்படும் அளவுக்கு அப்படியே இருக்கிறது. அதனால், இரண்டு பேரும் முதல் ரவுண்டிலேயே அவுட் ஆகிறார்கள்.

அடுத்த களத்தில் இருக்கும் நயன் தாராவுக்கு, இந்தப் படத்தில் முழுமையாக நடிப்பதற்கு வாய்ப்பு தரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். படம் முழுக்க வெறும் பில்டப்களால்தான் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதனால், நடிப்பைவிட அவர் அழகைக் காட்டத்தான் ரொம்பவும் மெனக்கெட்டு, அதில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். ஆனால், கமர்ஷியல் படத்தில் அழகுப் பொம்மைக்கு விருது கொடுப்பது நியாயம் இல்லை.

அடுத்ததாக மிஞ்சுபவர் சமந்தா. இதுபோன்ற கேரக்டர் என்று சொன்னாலே நடிகைகள் தலைதெறிக்க ஓடியே விடுவார்கள். ஆனால், வித்தியாசமான கேரக்டர் என்று தைரியமாக நடிக்க முன்வந்திருக்கிறார் சமந்தா. மேலும், படத்தில் ஒரே ஒரு பிட் கூட அதிகமாக நடிக்கவில்லை. ஒரு இயல்பான குடும்பத்தலைவியாக, நடித்து ஜெயித்திருக்கிறார். 

ஆகவே, சூப்பர்டீலக்ஸ் படத்தில் நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான டைம்ஸ் தமிழ் விருது வழங்கப்படுகிறது. 2019ம் ஆண்டின் சிறந்த நடிகையாக சமந்தாவை தேர்வு செய்து அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. வாழ்த்துக்கள் சமந்தா.