டைம்ஸ் தமிழ் 2019 சினிமா விருதுகள். சிறந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜா அல்லது மகிழ் திருமேனியா?

மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2019வது ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.


2019ம் ஆண்டின் சிறந்த இயக்குனர் யார் என்பதைப் பார்க்கலாம். ரஜினிகாந்தை வைத்து இயக்குவது சாதாரண விஷயம் அல்ல. எத்தனையோ பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் அந்த விஷயத்தில் தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆனால், ரஜினியை அவரது பாணியில் நடிக்கவைத்து வெற்றியடைய வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

அடுத்ததாக ஆரண்யகாண்டத்துக்குப் பிறகு சூப்பர் டீலக்ஸ் படம் கொடுத்து அசத்தியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. அருண் விஜய்யை வைத்து அற்புதமான ஒரு திரில்லர் படத்தைக் கொடுத்து ஜெயிக்க வைத்திருக்கிறார் மகிழ் திருமேனி.

இவர்களில் தியாகராஜன் குமாரராஜா, முதல் சுற்றிலேயே அவுட் ஆகிவிடுகிறார். நான்கு வித்தியாசமான கதை, பிரபலமான நடிகர்கள் போன்ற அத்தனை வசதிகள் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை இல்லாமல் படத்தை அவுட்டாக்கிவிட்டார். அதனால் தியாகராஜன் குமாரராஜா அவுட். 

அடுத்தது கார்த்திக் சுப்புராஜ். சிங்கத்துக்கு தீனி போடுவது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், சிங்கத்துக்கு வழக்கம்போல் மசாலா கதையை தேர்வு செய்ததில் தோற்றுப்போகிறார் சுப்புராஜ். ஒரு புதிய பார்வை, வித்தியாசமான சிந்தனை இல்லாமல் பக்கா கமர்ஷியல் படம் எடுத்துவிட்டு, சிறந்த இயக்குனர் விருது வாங்க முடியாது.

ஆகவே, எஞ்சியிருப்பவர் மகிழ் திருமேனி. அருண் விஜய் போன்ற ஒரு நடிகரை வைத்து, புத்தம் புதிய பரிசோதனை முயற்சியே செய்து வெற்றி அடைந்திருக்கிறார் மகிழ். இரட்டை வேடத்தில் அருண் விஜய் அசத்தலாக நடித்திருந்தாலும், அவரது திரைக்கதை படு வேகம். கொஞ்சமே வந்தாலும் காதல் அழகு. படத்திற்கு என்ன தேவையோ அது மட்டுமே இடம் பெற்றுள்ளது.

ஆகவே, 2019ம் ஆண்டின் டைம்ஸ் தமிழ் சிறந்த இயக்குனர் விருது பெறுகிறார் மகிழ் திருமேனி. இவர் மென்மேலும் பல சாதனைகளை நிகழ்த்த டைம்ஸ் தமிழ் வாழ்த்து தெரிவிக்கிறது. 

வாழ்த்துக்கள் மகிழ் திருமேனி.