டைம்ஸ் தமிழ் 2019 சினிமா விருதுகள். சிறந்த நடிகர் விஜய்யா, தனுஷா?

மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் 2019வது ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. 2019ம் ஆண்டின் சிறந்த நடிகர் யார் என்பதைப் பார்க்கலாம். சிறந்த நடிகருக்கு கடுமையான போட்டி என்றுதான் சொல்ல வேண்டும். அசுரனாகவே தனுஷ் வாழ்ந்திருக்க, பிகில் படத்தில் விஜய் மூன்று கெட்டப்களில் கலக்கியிருந்தார். இவர்கள் இருவரும் இப்படி என்றால், வயசான காலத்தில் யூத் போன்று பின்னி பெடலெடுத்திருந்தார் பேட்ட ரஜினி. இவர்களுக்குப் போட்டியாக கைதி படத்தில் செமையாக நடித்திருந்தார் கார்த்தி.

இந்த வரிசையில் கார்த்திக்கு மிகவும் சிறப்பான கேரக்டர் என்றாலும், பல்வேறு வகையான நடிப்பைக் காட்டுவதற்கு படத்தில் வாய்ப்பு இல்லை. கோபக்கார இளைஞனாக மட்டுமே மின்னியிருந்தார். அதனால் முதலில் இந்த பட்டியலில் இருந்து வெளியேறுகிறார். 

அடுத்தபடியாக தனுஷ். சின்ன வயதில் தனுஷ் நடிக்காமல் நிஜமாகவே வாழ்ந்திருந்தார். ஆனால், வயதான வேடம் அவருக்கு அத்தனை தூரம் ஒட்டவில்லை. அதுவும் தோளுக்கு உயர்ந்த பிள்ளைக்கு அப்பா என்பதை நம்பும் அளவுக்கு மேக்கப்பும் இல்லை, அவரது உருவமும் இல்லை. அதனால், சிறப்பாக நடித்திருந்தாலும் இந்தப் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

அடுத்தபடியாக ரஜினிகாந்த். பேட்ட படத்தில் ரஜினி சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும், இதே போன்று ஏராளமான படங்களில் நடித்துவிட்டார். இந்த வயதில் டான்ஸ் ஆடுவதும், சண்டை போடுவதும் நன்றாக இருக்கிறது என்றாலும், பரிதாபம் வருவதை தடுக்க முடியவில்லை. அதனால் ரஜினியும் அவுட்.

அடுத்தபடியாக மிஞ்சியிருப்பவர் பிகில் விஜய் மட்டும்தான். அன்பைக் காட்டுவது, நம்பிக்கை ஊட்டுவது, கோபத்தில் கொதிப்பது, வெற்றியில் துள்ளுவது, நகைச்சுவையில் அள்ளுவது, பாடலில் பின்னுவது என்று சகலவித்தைகளையும் காட்டியிருக்கிறார் விஜய். அப்பாவாக வரும் விஜய்யின் அலட்டல் இல்லாத நடிப்பும், இளம் விஜய்யின் துடிப்பும் நன்றாகவே எடுபட்டுள்ளது. மூன்று வேடத்திற்கும் வித்தியாசம் காட்டுவதற்கு ரொம்பவே மெனக்கெட்டுள்ளார் விஜய்.

ஆகவே, 2019 ஆண்டு டைம்ஸ் தமிழ் வழங்கும் சிறந்த நடிகருக்கான விருது பெறுகிறார் விஜய். இதுபோல், மேலும் பல விருதுகள் பெற்று சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடைவதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது டைம்ஸ் தமிழ். வாழ்த்துக்கள் விஜய்.