சரவணபவன் அண்ணாச்சி ஜெயிலுக்குப் போக நேரம் வந்தாச்சு! என்ன செய்யப் போகிறார் ஜீவஜோதி?

உழைப்புக்கு உதாரணம் காட்டவேண்டியவராக இருந்தவர் சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால்.


சாதாரண பெட்டிக்கடை, ஹோட்டல் என்று தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அண்ணாச்சிக்கு, இன்று உலகம் முழுவதும் கிளைகள். சரவணபவன் ஹோட்டலில் சாப்பிடுவதை தமிழர்கள் பெருமையாக கருதும் ஒரு நிலையைக் கொண்டுவந்தவரும் அண்ணாச்சிதான்.

என்ன செய்வது, எல்லாம் இருந்தும் சபலத்திற்கு ஆளானார். உழைப்பை நம்பிய அண்ணாச்சி ஜோதிடத்தை நம்பத் தொடங்கினார். அதனால் சிக்கலில் விழுந்தார். சாதாரண பெண்ணான ஜீவஜோதியின் வாழ்க்கையில் விளையாடினார்.

தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலைமையில் இருந்ததால், ஜீவஜோதியின் கணவரை கொலைசெய்து, அவரை அடைய நினைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். ஜீவஜோதி கடைசி வரை உறுதியாக நின்றதால், இன்று குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டு விட்டார்.

அவர் ஜூலை7ம் தேதி சரண் அடைய வேண்டும் என்று நீதிமன்றம் இப்போது உத்தரவு பிறப்பித்துவிட்டது. இனிமேலும் எந்த வகையிலும் நீதிமன்றம் அவரை வெளியே இருக்க அனுமதிக்காது என்பதால் சிறைக்குப் போகிறார் அண்ணாச்சி. ஜீவஜோதியும் இப்போது பெரும் துன்பத்தில் இருக்கிறார். அண்ணாச்சிக்கு கிடைக்கும் தண்டனை அவருக்கு விமோசனம் கொடுத்துவிட முடியாது என்பது உண்மை.

இப்போது அண்ணாச்சிக்கு உடலில் ஏராளமான வியாதிகள், சிக்கல்கள். குடும்பத்தில் உரிய மரியாதை இல்லை. அவர் கட்டிய கோயிலும் அவரை கைவிட்டதுதான் வேதனை. நீதிமன்றம் அவரை தண்டித்தாலும், பிராமணர்கள் கையில் இருந்த ஹோட்டல் தொழிலை மீட்டுக்கொண்டுவந்த அண்ணாச்சியின் உழைப்புக்கும் வெற்றிக்கும் தனி மரியாதை எப்போதும் உண்டு.