பால், பெட்ரோலுக்கு நேரக் கட்டுப்பாடு வருகிறதா..? எப்போது கிடைக்கும்னு தெரியுமா?

பால், பெட்ரோல் போன்றவை சப்ளை செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில், பாலுக்கு நேரக் கட்டுப்பாடு வந்துவிட்டது. அடுத்து பெட்ரோலுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதன்படி பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த சு.ஆ.பொன்னுசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் அஜாக்கிரதையாலும், மெத்தனத்தாலும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களும், வருமானம் ஒருபுறம் இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்து கடைகளை திறந்து வணிகத்தில் ஈடுபட்டு வரும் வணிகப் பெருமக்களும் காவல்துறையின் நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள், அடக்குமுறை அராஜகங்களால் பால் முகவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால் பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்ற பாலினை சில்லறை வணிகர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்கள் அனைவரும் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்றும், பால் முகவர்களின் கடைகளில் அதிகாலை 3.30மணி முதல் காலை 9.00மணி வரை மட்டும் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்வது என எங்களது சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

அதேபோன்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சார்பில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனால், குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சென்று பெற்றுக்கொள்ளுங்கள் மக்களே.