கோவா, ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நடந்தது இதுதான்! மின்சாரக் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி.யா?

இன்று கோவாவில் 37-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டம் நடைபெற்றது. நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.


இன்றைய கூட்டத்தில் 15-வது நிதிக்குழு கலந்துகொண்டு ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை சீரமைப்பது மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பான கருத்துக்களை முன் வைத்தது. 

இது தொடர்பாக ஜி.எஸ்.டி. வருவாய் போதிய அளவிற்கு அதிகரிக்கும் பட்சத்தில் மற்றும் சுமுகமான பொருளாதார நிலை நிலவும் பட்சத்தில் இந்த வரி விகிதங்களை சீரமைப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள வரி விலக்குகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற 15-வது நிதிக் குழுவின் கருத்திற்கு, இது தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். ஏனெனில், இந்த வரிச் சலுகைகள் அனைத்தும் சிறு வணிகர்கள், விவசாயிகள், கைவினை துறை போன்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அதனை அகற்றிடும் பட்சத்தில் அது அவர்களை பாதிக்கக் கூடும்.

தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் பெட்ரோலிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. விதிக்கப்படாமல் உள்ளது. மேலும் மின்சாரம் மீது ஜி.எஸ்.டி. வரிக்குட்படுத்துவது குறித்து 15வது நிதிக் குழு கருத்துரு தெரிவித்துள்ளது. ஆனால், மாநிலத்தின் நிதி தன்னாட்சியினை கருத்தில் கொண்டு பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகியவை ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தினார்.

மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகை அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தொகையானது ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே, அதாவது 2022-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட உள்ளது. மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயினை அதிகரிக்கும் பொருட்டு, இந்த ஐந்தாண்டு காலம் முடிந்த பின்னரும் மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும்,

அல்லது அதற்கு மாற்றாக தற்போது விதிக்கப்பட்டு வரும் இழுப்பீடு வழங்குவதற்கான மேல் வரியினை ஜி.எஸ்.டி. வரி விகிதத்தோடு இணைத்திட வேண்டும் என ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். 

இன்றைய கூட்டத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான சட்டக் குழுவின் பல்வேறு பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டன. ரூபாய் 2 கோடி வரை விற்பனை அளவு கொண்ட வணிகர்கள் ஆண்டு கணக்கு விவர அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என சட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. ரூபாய் 5 கோடி வரை ஆண்டு மொத்த தொகை உள்ள வரி செலுத்துவோர் ஆடிட் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டாம் என கேட்கப்பட்டது.

மேலும் புதிய படிவ விவர அறிக்கையினை தாக்கல் செய்யும் முறையினை அமல்படுத்துதல் மற்றும் வரி திருப்புத் தொகையினை ஒரே அதிகார அமைப்பு வழங்கிடுவது குறித்தான கருத்துரு வரவேற்கப்பட்டது. செங்கல் மீது இணக்க முறையில் வரி செலுத்துதல் மற்றும் வறு கடலை மீதான வரி வீதம் தொடர்பான தெளிவுரை வழங்குதல் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் வணிகப் பிரிதிநிதிகள், வணிக சங்கங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரப்பெற்றுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு மன்றத்தின் பரிசீலனைக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் தமிழகத்தால் முன்வைக்கப்பட்ட தீப்பெட்டிகள், பாலி ப்ரொப்பிலின் பைகள் (நெய்யப்படாதது), ஜிப்களின் பாகங்கள், வெட் கிரைண்டர், மீன் துகள்கள், தொன்னை மற்றும் தட்டுகள் (பலவகையான இலைகளில் இருந்து செய்யப்பட்ட), ரயில் பாகங்கள் மீதான உபரி உள்ளீட்டு வரியினை திரும்ப பெறுவதற்கான தடையினை, சரி செய்யும் பொருட்டு வரி விகித சீரமைப்பு,

என்ஜினியரிங் பாகங்கள் தயாரிப்பது தொடர்பான சில்லறை சேவைகள், வெளிப்புற உணவளிப்பு சேவைகள் போன்ற கோரிக்கைகளும் இன்று மன்றத்தால் விவாதிக்கப்பட்டது. இவற்றுடன் வேறு பல பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி விகிதங்களை மாற்றி அமைப்பது மற்றும் தெளிவுரை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள மீனவ மக்களின் நலன் கருதி மீன் துகள்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளித்திட வேண்டும் என ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். மேலும், வரி விகிதங்களை சீரமைத்தல், சாதாரண மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்கான பொருட்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பயன் பெறுவதற்கான பொருட்கள்,

சிறு கைவினையாளர்களால் செய்யப்படும் பொருட்கள், சமய உணர்வு சார்ந்த பொருட்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து சாதகமான முடிவினை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதில், குறிப்பாக, கைத்தறி பொருட்கள்; கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிகச் சின்னம் இடப்பட்ட அரிசி மற்றும் இதர உணவு தானியங்கள்; ஜவ்வரிசி; ஊறுகாய்; வெண்ணெய்; நெய்; விவசாயக் கருவிகள்; ஜவுளித் தொழிலில் பயன்படும் இயந்திர பாகங்கள்; பம்பு செட்டுகள்; மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள்; மரவள்ளிக் கிழங்கு ஸ்டார்ச்; வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள்;

பேக்கரி பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள்; பல்வேறு வகையான வத்தல்கள்; பிஸ்கட்டுகள்; உரம், நுண் ஊட்டச் சத்துகள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சை கொல்லிகள்; கற்பூரம்; காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா, மஞ்சள் போன்றவை மற்றும் அதன் பொடிகள்; சீயக்காய்; கடித உறை, அட்டைகள், டயரிகள் பயிற்சி குறிப்பு மற்றும் கணக்கு புத்தகம் போன்ற காகிதப் பொருட்கள்;

பாலியஸ்டர்/நாரினால் ஆன நெய்யப்படாத பைகள்; காதிப் பொருட்கள்; வெளுப்பதற்கான திரவம்; பவானி தரைவிரிப்பு; மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்; வேப்பம் பிண்ணாக்கு; அரிசி தவிடு மீது வரி விலக்கு அல்லது எதிரிடை கட்டணமாக மாற்றல்; வெள்ளி மெட்டி, தாலி போன்றவை; அலுமினிய பாத்திரங்கள் மற்றும் அலுமினிய கழிவுகள்; பட்டு நூல் மற்றும் சரிகை; தேங்காய் நார் பொருட்கள்; இரப்பர் கலந்த நாரினால் செய்யப்பட்ட மெத்தைகள்;

பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட்; சுருட்டு; கொள்கலனில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்; கோவில்களில் உபயோகிக்கப்படும் வாகனம், தேர், திருவட்சி ஆகியவை; மொறுமொறுப்பான ரொட்டித் துண்டு (ரஸ்க்); நன்னாரி சர்பத்; பனஞ்சர்க்கரை; பப்பாளி மிட்டாய்; காலர் துணி; சாம்பிராணி; பனைநார் மற்றும் மட்டைகள்; கோரைப் பாய்; பயோ டீசல்; சல்லா துணி மற்றும் கட்டு போடும் துணி; துணி பை;

மெழுகுவர்த்திகள்; சங்கு மற்றும் கடல் சிப்பியாலான கைவினைப் பொருட்கள்; கையால் செய்யப்பட்ட இரும்பு பெட்டி; கையால் செய்யப்பட்ட பூட்டு; பனிக்கூழ் போல் குளிர் பானங்களையும் இணக்கமுறை வரிவிதிப்பில் எதிர்மறை பட்டியலில் சேர்த்தல்; விவசாய நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளுக்கு வரி விலக்களித்தல்;

மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களித்தல்; சிட் நிதி சேவைகளுக்கு விலக்களித்தல்; நெல் குற்றுகை சேவைகளுக்கு வரி விலக்களித்தல்; நுண்நீர் பாசன கருவிகளுக்கு வரிவிலக்கு; மற்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு வரி விலக்கு வழங்கப்பட வேண்டுமென மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வலியுறுத்தினார்.  

இத்தனை வலியுறுத்தினது சரி, எதுவெல்லாம் கிடைச்சதுன்னு சொல்லவே இல்லையே..!