திருவாரூரில் அழகிரிக்கு ஆதரவு! அ.தி.மு.கவின் அதிரடி முடிவு!

திருவாரூர் இடைத்தேர்தலில் களம் இறங்கும் அழகிரியை ஆதரிப்பது என அ.தி.மு.க முடிவெடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


திருவாரூர் இடைத்தேர்தலில் கலைஞரின் மூத்த மகன் என்கிற சென்டிமென்டுடன் களம் இறங்க அழகிரி ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதனை அறிந்து தான் ஸ்டாலின் திருவாரூரில் தானே வேட்பாளராக இறங்குவது குறித்து பரிசீலித்து வருகிறார். அதாவது திருவாரூரில் கலைஞரின் மகன் என்கிற சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகும் என்பது ஸ்டாலினின் நம்பிக்கை.

  ஒரு வேலை அழகிரி திருவாரூரில் போட்டியிட்டால் தி.மு.க ஓட்டுகள் கூட அவருக்கு சென்றுவிடும் என்று ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளருது. எனவே தான் திருவாரூரில் வேட்பாளர் அறிவிப்பை மிக கவனமாக தி.மு.க பரிசீலித்து வருகிறது. ஏனென்றால் தி.மு.கவின் வாக்கு வங்கியை மட்டும் அல்லாமல் இமேஜையும் டேமேஜ் செய்யவே அழகிரி திருவாரூரில் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.

   இதனிடையே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற முடிவுக்கு அ.தி.மு.க வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது திருவாரூரை பொறுத்தவரை அந்த தொகுதி அ.தி.மு.கவிற்கு எட்டாக் கனி. திருவாரூரில் அ.தி.மு.கவிற்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அதே சமயம் தினகரன் கட்சியினர் அங்கு கணிசமான அளவில் உள்ளனர். எனவே திருவாரூரில் போட்டியிட்டால் இரண்டாவது இடத்திற்கே திணற வேண்டி வரும் என்று அ.தி.மு.க கருதுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வரும் இடைத் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடம் பிடித்து அவமானப்பட்டால் கட்சியே கலகலத்துவிடும் என்பதும் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது.

   எனவே கலைஞர் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ள அழகிரியை ஆதரிக்கலாம் என்கிற முடிவுக்கு அ.தி.மு.க வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது கலைஞர் தொகுதியில் அவரது மகனை அ.தி.மு.க ஆதரிக்கிறது என்கிற சென்டிமென்ட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்த அ.தி.மு.க நினைக்கிறது. இதன் மூலம் தி.மு.க மற்றும் தினகரனின் அ.ம.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்த முடியும் என்றும் அ.தி.மு.க கணக்கு போடுகிறது.

   அரசியலில் எதுவும் சாத்தியம் என்ற வகையில் பா.ஜ.க வேட்பாளராக அழகிரி களம் இறங்கும் பட்சத்தில், அவருக்கு ஆதரவு கொடுப்பது இன்னும் எளிமையாக இருக்கும் என்று அ.தி.மு.கவினர் நினைக்கின்றனர். எனவே இதனை அடிப்படையாக கொண்டே திருவாரூர் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவின் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.