பெண்களுக்கான நாப்கின் பயன்பாடு குறித்து போதிய விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தும் பணியை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆசிரியை திறம்பட செய்து வருகிறார்.
என் தோழிக்கு பீரியட்ஸ்! நாப்கின் வேணும்! ஆசிரியையிடம் மாணவன் கேட்ட கேள்வி!
திருவண்ணாமலையின் ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கான பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமி. இவர் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது என்ன? ஏன் துணியை பயன்படுத்தாமல் நாப்கின் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றியெல்லாம் மாணவிகளுக்கு மட்டும் அல்ல மாணவர்களுக்கும் தயக்கமின்றி சொல்லிக் கொடுத்து வருகிறார்.
எதிர்கால சந்ததியினர் இனிமேலாவது மாதவிடாய் என்பதை மறைத்து பேசாமல் வெளிப்படையாக பேசும் அளவுக்கு அது ஒரு சாதாரண இயற்கை உடல் சார்ந்த விஷயம் என்பதை கற்றுக்கொடுக்கவும் செய்கிறார் மகாலட்சுமி. இவரது முயற்சியால் தற்போது மாணவர்கள் தங்கள் தோழிக்குக்கூட நாப்கின் கேட்டு வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தன்னைப் போலவே, தன் எதிர்பாலினத்தவருக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிகிறார் மகாலட்சுமி.
இதுநாள் வரையில் மாதவிடாய் காலத்தில் துணியை பயன்படுத்தி வந்த மாணவிகள் மற்றும் அவரது அம்மாக்களுக்கும் போதி விழிப்புணர்வு ஏற்படுத்தி நாப்கின் பயன்படுத்த பழக்கப்படுத்தி உள்ளார்.
அரசுப் பள்ளி என்பதால், இலவச நாப்கின் பாக்கெட்டுகள் வருகிறது. அதை கொண்டு வர மாணவர்களையே அனுப்பும் மகாலட்சுமி, பாடம் எடுக்கும்போது, நாப்கின் எப்படி இருக்கும் என்பதையும் அவர்களுக்கு `மாதிரி'யாகக் காட்டிவிடுகிறார். மேலும் அதை எப்படி உபயோகிப்பது என பெண் பிள்ளைகளுக்கு தனி வகுப்புகள் எடுக்கிறார்.
இதனால் தற்போது பெண் குழந்தைகளும் தங்கள் அம்மாவிடம் சென்று நாப்கின் குறித்து தயக்கமின்றி தெரிவிக்கின்றனர். தற்போது `அம்மாவுக்கு நாப்கின் வேணும் மிஸ்' என்று கேட்டுப் பெற்றுச் செல்லும் பிள்ளைகள் தயார் ஆகிவிட்டார்கள் என்றால் பாருங்களேன் !