தள்ளாடியபடியே வந்த லாரி! அதிவேகத்தில் சென்று சொறுகிய கார்! குடிபோதை ஓட்டுனரால் பறிபோன 5 உயிர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


திருவண்ணாமலை அய்யம்பாளையத்தில் கர்நாடக மாநிலத்தை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதே சமயம் செங்கத்தை நோக்கி சரக்கு லாரி ஒன்றும் சென்று கொண்டிருந்தது.

இரண்டு வாகனங்களும் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அய்யம்பாளையத்தில் எதிரெதிரே வந்த வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் காருக்குள் இருந்த உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிந்த போலீசார் உயிரிழந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரித்து வருகின்றனர். விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒருமணிநேரம் மற்ற வாகனங்கள் கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விபத்துக்கான காரணம் எதுவாகியினும் நம்மை நம்பித்தான் ஒவ்வொருவரும் வாகனத்தில் வருகிறார்கள் என்பதை அனைத்து ஓட்டுநர்களும் உணர்ந்தால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என்பதே உண்மை. இதனிடையே லாரி டிரைவர் குடிபோதையில் ஓட்டி வந்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

லாரி டிரைவர் தடுமாறியதை பார்த்து அதிர்ந்த கார் ஓட்டுனர் திடீரென என்ன செய்வது என்று தெரியாமல் பிரேக் போட இதனை பார்த்து பயந்த லாரி ஓட்டுனரும் பிரேக்கை அழுத்த லாரிக்குள் சென்று கார் சொறுகியுள்ளது.