நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த போலி பெண் டாக்டர், மீண்டும் சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பில் ஈடுபட்டதால் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1000 பெண்களுக்கு கருக்கலைப்பு! தமிழகத்தையே அதிர வைத்த திருவண்ணாமலை ஆனந்தி! ஜாமீனில் வந்து செய்த திடுக் சம்பவம்!
திருவண்ணாமலை அருகே உள்ள பகுதியில் பெண்களுக்கு கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த போலி பெண் டாக்டர் ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக் கலைப்பு செய்திருப்பதாக தகவல்கள் தெரியவந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த ஆனந்தி, வெளிமாநில பெண்களுக்கு இம்முறை கருக்கலைப்பு செய்து வருவதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுகந்திக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. உரிய ஆதாரத்துடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆனந்தியை போலீஸ் தரப்பு வலைவீசி தேடி வந்தது. கள்ளக்குறிச்சியில் போலி டாக்டர் தொழிலை மீண்டும் செய்து வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று பார்த்த போது தப்பி ஓடிவிட்டார் ஆனந்தி. திருவண்ணாமலை அருகே உள்ள தனது சொந்த வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று ஆனந்தியை கைது செய்துள்ளனர்.
ஆனந்திக்கு உதவியாக இருந்த அவரது கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் போலீஸ் தரப்பு கைது செய்திருக்கிறது. இவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.