அகத்தியருக்கு மூலிகை மருத்துவத்தை சிவன் அருளிய திருத்தலம்! திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம்!

திருவான்மியூர் சென்னை நகரின் தென்பகுதியில் உள்ளது.


இங்குள்ள மருதீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் உள்ள 300-க்கும் மேற்ப்பட்ட சிவாலயங்களில் இதுவும் ஒன்று. அகஸ்திய முனிவர் ஹெர்பல் மருந்துகளைப்பற்றி ஆராயும் போது சிவபெருமானே நேரில் வந்து அகஸ்தியருக்கு மருந்து வகைகளைப் பற்றி அருளிச்செய்த சிறப்பு தலம். ஆதலால் மருதீஸ்வரர் மருந்துகளின் கடவுள் ஆவார்.இந்த கோவிலில் தான் இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கு இறைவன் திரு நடனக்காட்சி அருளியதாக வரலாறு கூறுகிறது. ஆகையால் இத்தலம் வால்மீகியூர் என்று பெயர் பெற்றது. பின்னர் அப்பெயர் மருவி திருவான்மியூர் ஆனது.

காமதேனு என்னும் பசுவை பால் சொரிந்து வழிபட்ட சிறப்புடையது. வேதங்கள் பூசித்த தலம். தேவர்கள், சூரியன் பிருங்கி முனிவர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். ஒரு சமயம் இப்பகுதியானது நீரால் சூழப்பட்டிருக்கும் பொழுது அப்பைய தீட்சிதர் என்னும் அருளாளர்க்காக எளிதில் தரிசனம் தருவது பொருட்டு மேற்கு நோக்கி நல்கிய நிலையில் சுவாமி சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இங்கு சுப்பிரமணியர் சந்நிதி, விஜய கணபதி சந்நிதி உள்ளன.

அம்பிகை சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. இங்குள்ள சுக்கிரவார அம்மன் சன்னிதி தனிச்சிறப்புடையது. அனுமன் பூசித்த லிங்கம், இந்திரனது சாபத்தைத் தீர்த்த மீனாட்சி சுந்தரேசுவரர் மற்றும் பரத்துவாசர் பூசித்த லிங்கம் இங்குள்ளது. முதற்கண் பிரம்மன் இத்தலபெருமாளுக்கு விழா எடுத்தார். சந்திரன் குரு பத்தினியைச் சேர்ந்த சாபம் இத்தலப்பெருமானை பூசித்து வழிபட்டதால் விலகிற்று என்பது புராண வரலாறு.

மார்க்கண்டேயர் தவமிருந்து ஈசனை பூசித்த தலம். இங்கு ஜென்ம நாசினி, காமநாசினி, பாவ நாசினி, ஞானதாயினி, மோட்ச தாயினி, என்னும் ஐந்து தீர்த்தங்கள்உண்டு. இராமபிரான், ஸ்ரீகிருஷ்ண பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் கொண்ட தலம்.பாம்பன் சுவாமிகள் எனப்பெறும் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முக்தி பெற்ற தலம்.இவ்வளவு பெறுமை கொண்ட இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கிஅனைவரும் நற்பேறு அடைவோமாக.