ஐந்து ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பெண் குழந்தை..! ஐந்து நிமிட அஜாக்கிரதையால் மரணம் தழுவிய கொடூரம்!

திருப்பூர்: ஒரு வயது பெண் குழந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் அனுப்பர்பாளையம் படேல் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (30 வயது). இவரது மனைவி பாண்டியம்மாள் (25 வயது). இவர்களுக்கு ஒரு வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், வழக்கம்போல புதன்கிழமை கண்ணன் வேலைக்குச் சென்றுவிட்டாராம். வீட்டில் தனியாக இருந்த பாண்டியம்மாள் துணி துவைப்பதற்காக, பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைத்திருந்துள்ளார். 

அழுக்குத் துணிகளை எடுக்க அவர் வீட்டின் உள்ளே சென்றபோது, பக்கெட் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென பக்கெட்டிற்குள் தலைகீழாக விழுந்துவிட்டதாம். இதில் மூச்சுத்திணறி குழந்தை மயங்கி விடவே, அடுத்த சில நிமிடங்கள் கழித்து பாண்டியம்மாள் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.   

உடனடியாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. திருமணமாகி, 5 ஆண்டுகள் குழந்தை இன்றி வாடிய நிலையில், மிகவும் வேதனைக்கு இடையே, கனிஷ்காவை பெற்று வளர்த்ததாகவும், ஆனால், திடீரென அந்த குழந்தையும் இறந்துவிட்டதாகவும் பாண்டியம்மாள் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.